ஐ.நா-வில் சீர்திருத்தம் நிகழவில்லை: இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் அதிருப்தி

நியூயார்க்: ஐ.நா பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும், ஐ.நா-வில் சீர்திருத்தம் நிகழவில்லை என்றும் இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

ஐ.நா பொது அவையின் 77-வது அமர்வு தொடங்கியுள்ள நிலையில், இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நியூயார்க்கில் ஆலோசனை மேற்கொண்டனர். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஜப்பான் வெளியுறவு அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னலீனா பேர்போக், பிரேசில் வெளியுறவு அமைச்சர் கார்லஸ் அல்பெர்டோ ஃபிரான்கோ ஃபிரான்கா ஆகியோர் மேற்கொண்ட ஆலோசனையை அடுத்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: உலக அளவில் நிகழ்ந்து வரும் மோதல்கள், அதிகரித்து வரும் சிக்கல்கள், நாடுகளுக்கு இடையே பின்னிப் பிணைந்துள்ள சவால்கள் ஆகியவை ஐ.நா-வின் முக்கிய அமைப்புகளில் சீர்திருத்தத்திற்கான அவசியத்தை வலியுறுத்துகின்றன.

உலகம் எதிர்கொண்டு வரும் சவால்களை திறம்பட எதிர்கொள்ள இயலாத நிலையில் ஐ.நா பாதுகாப்பு அவை இருப்பதை ஐ.நா ஒப்புக்கொள்கிறது. எனவே, மாறி உள்ள புவிசார் அரசியலை கருத்தில் கொண்டும், பிராந்தியங்களுக்கான பிரதிநிதித்துவத்தை கருத்தில் கொண்டும் ஐ.நா பாதுகாப்பு அவை சீர்திருத்தப்பட வேண்டும். அதன்மூலமே, உலகம் எதிர்கொள்ளும் சவால்களை திறம்பட எதிர்கொள்ள முடியும்.

ஐ.நா பாதுகாப்பு அவையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதற்கான அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் அர்த்தமுள்ள முன்னேற்றம் ஏற்படாதது குறித்து இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் ஆகிய ஜி4 நாடுகள் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.நா பொது அவையின் 76வது அமர்வின்போதே தங்கள் கவலையை தெரிவித்திருந்தன.

தற்போதைய 77-வது அவையின்போதும் நிலமை அப்படியேதான் இருக்கிறது. அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஐ.நா-வின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஆக்கபூர்வ முடிவுகளை எடுப்பதாக ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது ஜி4 நாடுகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எழுத்துபூர்வமான பேச்சுவார்த்தையை நோக்கி படிப்படியாக முன்னேற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற 76-வது அவையின் தலைவரது வாக்குறுதியை ஜி4 நாடுகள் வரவேற்றன. இந்த வாக்குறுதி தற்போதைய 77-வது அவையின் அனைத்து உறுப்பினர்களாலும் பின்பற்றப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

பாதுகாப்பு அவையின் நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்த வேண்டும் என்பதையும் அதன்மூலமே மேலும் வலிமையுடன் செயல்பட முடியும் என்பதையும் ஜி4 அமைச்சர்களாகிய நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி4 நாடுகள் அனைத்தும் ஐ.நா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக மாற தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்தக் குழுவில் உள்ள ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளை இவ்விஷயத்தில் ஆதரிக்கின்றன. அதோடு, ஆப்பிரிக்க கண்டத்திற்கு ஐ.நா பாதுகாப்பு அவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் இந்த 4 நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.