கேரளாவில் ஓணம் லாட்டரியில் ரூ25 கோடி பரிசு விழுந்தவர் ஓட்டம்: பணம் கேட்டு ஒரே தொல்லையாம்

திருவனந்தபுரம்: ‘லாட்டரியில் பரிசு விழுந்ததில் இருந்து என்னிடம் தினமும் பணம் கேட்டு நண்பர்களும், உறவினர்களும் தொல்லை செய்கின்றனர்,’ என கூறியுள்ள ஆட்டோ டிரைவர் தலைமறைவாகி விட்டார். கேரளாவில் கடந்த வாரம் நடந்த ஓணம் லாட்டரி குலுக்கலில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான அனூப்புக்கு முதல் பரிசான ரூ.25 கோடி கிடைத்தது. பரிசு விழுந்த பிறகு இவரின் நிலை பரிதாபமாகி விட்டது. அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: லாட்டரியில் ₹25 கோடி ஏன் கிடைத்ததோ என்று எண்ணுகிறேன்.

பரிசு விழுந்ததும் சில நாட்கள் மட்டுமே மகிழ்ச்சியாக இருந்தேன். இப்போது, மகிழ்ச்சி பறிபோய் விட்டது. என்னிடம் தினமும் பணம் கேட்டு ஏராளமானோர் தொல்லை கொடுக்கின்றனர். தமிழ்நாட்டில் இருந்தும் கூட சிலர் வீட்டிற்கு வந்து பணம் கேட்கின்றனர். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை, வேலைக்கு செல்ல முடியவில்லை என்கின்றனர். பணம் இருப்பவர்கள் கூட உதவி கேட்கின்றனர். இதனால், நண்பர்களும், உறவினர்களும், பக்கத்து வீட்டினரும் கூட விரோதிகளாகி விட்டனர்.  இன்னும் எனக்கு பணம் கிடைக்கவில்லை என கூறினாலும், நம்ப மறுக்கின்றனர்.

இதனால், குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறி, யாருக்கும் தெரியாமல் வேறு வீட்டில் வசிக்கிறேன். 3வது பரிசு கிடைத்திருந்தால் கூட இந்த அளவுக்கு தொந்தரவு இருந்திருக்காது. ஏற்கனவே எனக்கு ஏராளமான விரோதிகள் உண்டு. இப்போது, மேலும் அதிகமாகி விட்டனர். பரிசுத் தொகை கிடைத்தால் 2 வருடங்களுக்கு வங்கியில் போட்டு விடுவேன். அதன் பிறகே, அதை எப்படி செலவு செய்வது என்று யோசிப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.