வரதட்சணை கேட்டு வெளியேற்றியதால் கடப்பாரையால் கதவை உடைத்து கணவர் வீட்டில் புகுந்த பெண்: மயிலாடுதுறை அருகே பரபரப்பு

மயிலாடுதுறை: வரதட்சணை கேட்டு வெளியேற்றியதால் கடப்பாரையால் கணவரின் வீட்டு கதவை உடைத்து பெண் உள்ளே சென்ற சம்பவம் மயிலாடுதுறை அருகே பரபரப்ைப ஏற்படுத்தியது. மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் தெற்கு வெளியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் நடராஜன்(32). சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். திருவாரூர் மாவட்டம் பில்லூர் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் மகள் பிரவீனா(30). இவர்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 24 பவுன் நகை, ராயல் என்பீல்டு பைக் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர். 3 மாதம் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் மேலும் வரதட்சணை கேட்டு பிரவீனாவுக்கு கணவரின் குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் பிரவீனாவை, வீட்டைவிட்டு வெளியேற்றியதுடன் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு கணவரின் குடும்பத்தினர் சென்று விட்டனர். ஆனாலும், கடந்த 20 நாட்களாக கணவர் வீட்டின் முன் பிரவீனா காத்திருந்தார். ஊர் முக்கியஸ்தர்கள் பேசியும், நடராஜன் குடும்பத்தினர் கண்டுகொள்ள வில்லை. இதனால் ஆத்திரமடைந்த பிரவீனா, அப்பகுதி மக்களுடன் வந்து மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜிடம் புகார்மனு அளித்தார். இந்நிலையில் உறவினர் வீட்டிற்கு சென்று இருந்த நடராஜன் குடும்பத்தினர் நேற்றுமுன்தினம் வந்து மாடுகளை மட்டும் பராமரித்துவிட்டு வீட்டை பூட்டி விட்டு மீண்டும் உறவினர் வீட்டிற்கு சென்றனர். ஆனால் வீட்டிற்குள் பிரவீனாவை விடவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பிரவீனா, நேற்றுமுன்தினம் இரவு பொதுமக்கள் உதவியுடன் கடப்பாரையால் வீட்டின் பூட்டை உடைத்து கணவரின் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தார். பின்னர் அங்கு இரவு முழுவதும் தங்கி இருந்தார். தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிரவீனா, எனது கணவர் இதுநாள் வரை எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. கணவரின் குடும்பத்தினர் என்னை  வீட்டைவிட்டு வெளியேற்றியதற்கான காரணம் தெரிய வில்லை. எனது கணவரை கண்டுபிடித்து கொடுத்து என்னை அவருடன்  வாழ வையுங்கள். என் கணவர் வந்து என்னுடன் வாழப்பிடிக்கவில்லை என்று கூறினால்  மட்டுமே ஏற்றுக்கொள்வேன் என போலீசாரிடம் கண்ணீருடன் முறையிட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.