காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தி அடைந்த 23 கட்சி பிரமுகர்கள் தலைமைக்கு கடிதம் எழுதினார்கள். அதில் முக்கியமானவர் குலாம்நபி ஆசாத். அந்த கடிதத்தில், “பெயரளவுக்கு மட்டுமே நீங்கள் கட்சியின் தலைவராக இருக்கிறீர்கள். முடிவுகள் அனைத்தையும் ராகுல்காந்தியும், அவரது ஆதரவாளர்களே எடுக்கிறார்கள். மூத்த தலைவர்களுக்கு தற்போது கட்சியில் எந்த மரியாதையும் இல்லை. மேலும் மூத்த தலைவர்களின் ஆலோசனையுடன் முடிவுகள் எடுக்கும் கலாச்சாரத்தை ராகுல்காந்தி சீரழித்துவிட்டார்” என்று தெரிவித்தார்.
நீண்ட நாட்களாக குலாம்நபி ஆசாத் அதிருப்தியில் இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிரடியாக விலகினார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பாரமுல்லா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், 10 நாட்களுக்குள் புதிய கட்சியை தொடங்குவேன் என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.
மேலும் அவர் கூறும்போது, புதிதாக தொடங்க உள்ள கட்சியின் பெயர் உருது வார்த்தைகளாகவோ, சமஸ்கிருது வார்த்தைகளாகவோ இருக்காது என்று அறிவித்தார். இதனால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் குலாம்நபி ஆசாத், ‘ஜனநாயக ஆசாத் விடுதலை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இவருக்கு அரசியல் ஆலோசகர்கள் பலர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
குலாம்நபி ஆசாத்தின் புதிய கட்சி காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று அரசியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.