புதுடில்லி :பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் அரசியல் சாசன சட்டத் திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்ற அமர்வு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையிலான சட்டம், 2019ல் பார்லிமென்டில் நிறைவேறியது.
எஸ்.சி., – எஸ்.டி., மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான, 50 சதவீத இட ஒதுக்கீடுகளைத் தவிர, மீதமுள்ள 50 சதவீதத்தில் இந்த, 10 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் என, அறிவிக்கப் பட்டது.இதற்காக அரசியல் சாசனத்தில், 103வது திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து, பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். தமிழக அரசும் இந்த வழக்கில் இணைந்து கொண்டது.தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, எஸ்.ரவீந்திர பட், பீலா திரிவேதி, ஜே.பி.பர்திவாலா அடங்கிய, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
கடந்த 13ம் தேதி துவங்கி, மொத்தம் ஆறரை நாட்கள் விசாரணை நடந்தது.மத்திய அரசின் தரப்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டனர்.வழக்கு தொடர்ந்தோர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்ரமணியம், ரவி வர்மா குமார், பி.வில்சன் உள்ளிட்டோர் வாதிட்டனர்.அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், உச்ச நீதிமன்ற அமர்வு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement