சேலம்: ‘மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா என்றுமே சாதி அரசியல் செய்ததில்லை, அதைபற்றி பேசியதில்லை’ என பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பெங்களூரு புகழேந்தி, “அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன், செம்மலை போன்றவர்கள் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி பின்னால் நின்று எவ்வாறு வேடிக்கை பார்க்கின்றனர் என்பது எனக்கு தெரியவில்லை. செங்கோட்டையன் தனது சமுகத்தைச் சேர்ந்த தங்கமணி, வேலுமணி, பொன்னையன் உள்ளிட்டோர் பின்புலத்தை கொண்டு, சாதி சார்ந்த அரசியலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா என்றுமே சாதி அரசியல் செய்ததில்லை, அதைபற்றியோ பேசியதில்லை.
எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி பற்றிய பல ரகசியம் உள்ளது. அது விரைவில் வெளிவரும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்த போது, பழனிசாமி உள்ளிட்டோர் செய்த துரோக செயல்களை விரைவில் வெளியிடுவேன். தற்போதுள்ள எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிட தயாரா, நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன் யார் வெற்றி பெறுவார்கள் என்று பார்போம், உண்மை நிலை பிறகு தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.