மதுரை | அரசு மருத்துவமனைக்கு ஒரு நாள் மருத்துவ சுற்றுலா – நோயாளிகளுடன் கல்லூரி மாணவிகள் ஆடிப்பாடி நெகிழ்ச்சி

மதுரை: மதுரை அருகே அரசு மருத்துவமனைக்கு மருத்துவ சுற்றுலா சென்ற கல்லூரி மாணவிகள், மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் சேர்ந்து ஆடி, பாடி மகிழ்ந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனைகள் என்றாலே இறைச்சல், கூட்டம், சுகாதார சீர்கேடு, தரமற்ற சிகிச்சை என்ற தவறான பிபம்பம் இன்றைய இளைய தலைமுறையினரிடம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தேவையான சுகாதாரமான அடிப்படை வசதிகளில் தொடங்கி சர்வதேச தரத்திலான சிகிச்சைகள் வரை சிறப்பான சேவைகளை அருசு மருத்துவமனைகள் வழங்குகிறது. எந்த ஒரு உயிர் காக்கும் சிகிச்சையும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் வெற்றிகரமாக வழங்கப்படுகிறது.

அப்படி தினந்தோறும் பலன் அடைந்தோரை கேள்விப்பட்டு தற்போது மெல்ல மெல்ல பொதுமக்கள் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளை நாடி வர ஆரம்பித்துள்ளனர். ஆனால், அது கல்லூரிகளில் படிக்கும் இன்றைய இளைய தலைமுறையினரை இன்னும் சென்றடைந்துள்ளதா? என்பது தெரியவில்லை. செல்போன் பயன்பாடு, டிஜிட்டல் என்று மூழ்கியுள்ள சமூகச்சூழலில் அரசு மருத்துவமனையின் மகத்துவத்தை பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், மதுரை லேடி டோக் கல்லூரி நிர்வாகம், தங்கள் கல்லூரியின் சமூக அறிவியல் மாணவிகள் 65 பேரை பேராசிரியர் அனிதா தலைமையில் மதுரை தோப்பூர் நெஞ்சக நோய் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றது. தோப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் அடர்த்தியான மரங்கள், சுற்றிலும் செடிகள் என்று பசுமைசோலையாக காணப்பட்டது. நோயாளிகள் வாசிப்பிற்கு நூலகம், இளைப்பாற பூங்கா, விளையாட தனி விளையாட்டு அரங்கம், வாக்கிங் செல்ல நடைப்பயிற்சி பாதைகள் என்று தனியார் மருத்துவமைனக்கு நிகராக இந்த மருத்துவமனை பராமரிக்கப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தையும், அங்கு நோயாளிகள் பராமரிக்கப்படும் விதத்தையும், மருத்துவர்கள், செவிலியர்கள் அவர்களை கரிசனையாக அணுகும் முறையையும் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.

கல்லூரி மாணவிகளின் மருத்துவ சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்த ஆனந்தராஜ், வெரோணிகா மேரி கூறுகையில், ‘‘கரோனா பேரிடர் நாட்களில் அரசு மருத்துவமனைகள் ஆற்றிய சேவை மிகபெரியது. அதனால், அரசு மருத்துவமனை மேம்பாட்டிற்கு ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பங்களிப்பை அளிக்க வேண்டும். அதை எதிர்கால தலைமுறையினரும் புரிய வேண்டும் என்பதற்காக மாணவிகளை அரசு மருத்துவமனையை தேர்ந்தெடுத்து நேரடியாக அங்கு அழைத்து சென்றோம். மருத்துவமனை நோயாளிகள், ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் மருத்துவமனையின் அன்றாட செயல்பாடுகளை கேட்டு தெரிந்து கொண்டனர்.

இதுபோல், இந்த மருத்துவமனையை போல் பிற அரசு மருத்துவமனைகளையும் மேம்படுத்த மாணவ சமுதாயத்தினர் எவ்வாறு தங்கள் பங்களிப்பை அளிக்கலாம் என்று மாணவிகளுக்கு மருத்துவமனை ஊழியர்கள் ஆலோசனைகளை வழங்கினர். மருத்துவமனை நோயாளிகள், உடன் இருப்பவர்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் என்று அனைவரிடமும் மருத்துவமனை நிறை குறைகளை கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டனர். மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் மாணவிகள் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் மூலம் ஆடிப்பாடி அவர்களை மகிழ்வித்தனர். அரசு மருத்துவமனை மேம்பாட்டிற்கு மாணவ சமுதாயம் என்றும் துணை நிற்போம் என்று மாணவிகள் மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்களிடம் நெகிழ்ச்சியாக தெரிவித்தனர், ’’ என்றார்.

மருத்துவமனை நிலைய மருத்துவர் காந்திமதி நாதன் மாணவியர்களின் வருகையை பாராட்டி இந்த மருத்துவமனை கடந்து வந்த வெற்றி கதையும், அதற்கு மருத்துவமனை டீன் ரத்தினவேலுவின் பங்களிப்பையும் பகிர்ந்து கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.