காங்கிரஸ் தலைவர் தேர்தல்; பொதுவிவாதம் கோரும் சசிதரூர்… தவிர்க்கும் கார்கே! – பின்னணி என்ன?

கடைசியில், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் நேரு குடும்பத்தின் ஆதரவுபெற்ற வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கே களம் காண்கிறார். காங்கிரஸின் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சசிதரூரும் போட்டியில் இருக்கிறார். அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இவர்கள் இருவரும் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

மல்லிகார்ஜுன கார்கே

ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகிய இருவரின் அரசியல், சமுகப் பின்னணி வெவ்வேறானவை. கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, அரசியலில் முதிர்ந்த அனுபவம் வாய்ந்தவர். 2005 முதல் 2008 வரை கர்நாடகா காங்கிரஸின் தலைவராக அவர் பதவி வகித்தார். அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் அங்கு பெரும் வெற்றியைப் பெற்றது.

கார்கே, கட்சியின் அடிமட்டத் தொண்டராக இருந்து உயர் பொறுப்புக்கு வந்தவர். கர்நாடகாவில் 1972-ம் ஆண்டிலிருநது ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார். இரண்டு முறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டார். காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது முறை ஆட்சியமைத்தபோது, அதில் தொழிலாளர் நலன் மற்றும் ரயில்வே அமைச்சராக இருந்தார். கர்நாடகாவில் ஆறு முறை அமைச்சராக இருந்திருக்கிறார்.

சசிதரூர்

ஐ.நா-வில் துணைப் பொதுச்செயலாளராகப் பதவி வகித்த சசிதரூர், 2009-ம் ஆண்டு அரசியலுக்கு வந்தார். கேரளாவில் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக 2009-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் வெற்றிபெற்றார். 2019 தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம், தொடர்ந்து 3-வது முறையாக திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி-யாக அவர் பதவி வகிக்கிறார். காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனே, அந்தத் தேர்தலில் போட்டியிட அவர் ஆர்வம் காண்பித்தார்.

தற்போது கார்கேவுக்கும் சசிதரூருக்கும் இடையேதான் போட்டி என்கிற நிலையில், வேட்பாளர்களுக்கு இடையே பொதுவிவாதம் நடத்துவதற்கு சசிதரூர் ஆர்வம் தெரிவித்திருக்கிறார். “திறன்மிக்க தலைமை மற்றும் அமைப்புரீதியான சீர்திருத்தங்கள் ஆகிய இரண்டிலும்தான், காங்கிரஸ் தற்போது எதிர்கொண்டிருக்கும் சவால்களுக்கான தீர்வு இருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வேட்புமனு தாக்கலின் இறுதிநாளுக்கும் தேர்தலுக்கும் இரண்டரை வார இடைவெளிதான் இருக்கிறது. இந்த காலஅவகாசத்துக்குள் 9,000 கமிட்டி உறுப்பினர்களையும் அணுகி வாக்குச் சேகரிப்பது சிரமம். எனவே, கட்சிக்கான தங்கள் கருத்துகளையும் பார்வைகளையும் ஒரே மேடையில் வேட்பாளர்கள் முன்வைக்கும்போது அவை எளிதாகச் சென்றடையும்” என்கிறார் சசிதரூர்.

மல்லிகார்ஜுன கார்கே

ஆனால், பொதுவிவாதம் நடத்துவதில் கார்கேவுக்கு விருப்பம் இல்லை. “சசிதரூர் என் இளைய சகோதரரைப் போன்றவர். கருத்தொற்றுமை அடிப்படையில் ஒரு வேட்பாளரை முடிவுசெய்வது சிறப்பாக இருக்கும் என்று சசிதரூரிடம் கூறினேன். ஆனால், தேர்தலில் போட்டி இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். எனக்குப் பணியாற்றத்தான் தெரியும். அதற்கான வாய்ப்பை கமிட்டி உறுப்பினர்களிடம் கேட்கிறேன்” என்கிறார் கார்கே.

மூத்த தலைவர்கள் சிலருடன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்கே, “நான், காங்கிரஸ் கட்சியின் தலைவரானால் நேரு குடும்பம் மற்றும் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து செயல்படுவேன். அதற்காக, என் 50 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் எதையும் நான் கற்கவில்லை என்று அர்த்தமல்ல. காங்கிரஸை வலுப்படுத்தும் நோக்கத்துக்காகவே நான் போட்டியிடுகிறேன்” என்றார்.

சசிதரூர்

சசிதரூர் ஐ.நா-வில் பணியாற்றியவர் என்பதால், மேற்கத்திய சிந்தனைகளுடன் பொதுவிவாதத்தில் ஆர்வம் காட்டியிருக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இத்தகைய பொது விவாதம் நடத்துவதை யாரும் விரும்பவில்லை. சரிந்துபோயிருக்கும் காங்கிரஸின் செல்வாக்கை யாரால் தூக்கிநிறுத்த முடியுமோ அவர் தலைவராக வர வேண்டும் என்றே கட்சியினர் விரும்புகிறார்கள். இத்தகைய சூழலில், தற்போதைய தேவை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வுடன் மோதுவதுதானே தவிர, வேட்பாளர்களுக்கு போட்டியோ, விவாதமோ தேவையில்லை” என்கிறார்கள் காங்கிரஸார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.