ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் சிகிச்சை: நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

மணிப்பூர் மற்றும் மேற்குவங்க மாநிலங்களின் ஆளுநரும், முன்னாள் பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் கடந்த 1ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கார்டியாக் கேர் யூனிட்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இல.கணேசனின் உடல் நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார். உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் ஆளுநர் இல.கணேசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இல.கணேசன் விரைந்து முழு உடல்நலன் பெற்று, தனது அன்றாடப் பணிகளுக்குத் திரும்பிட விழைகிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஸ்டென்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. இன்று இரவு அல்லது நாளை காலை அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரு நெருங்கிப் பழகிய இல.கணேசன், மாற்றுக் கட்சியினரிடமும் பண்போடு பழகக் கூடியவர். பாஜக தேசிய செயலாளராகவும், கட்சியின் தேசிய துணை தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தேசிய அளவில் சிறப்பாக பணியாற்றிய அவரை தமிழகத்தில் கட்சியை வலுவாக்கும் நோக்கில் மாநிலத் தலைவராகவும் அக்கட்சி மேலிடம் நியமித்தது. தஞ்சாவூரை பூர்வீகமான கொண்ட அவர், மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.