கான்பூர்: உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் நடந்த 2 சாலை விபத்துகளில் 31 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் உன்னாவ் அருகே பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான மக்கள் குடும்பத்தினருடன் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் இதே பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று முன்தினம் இந்த கோயிலுக்குச் சென்றனர். சாமி தரிசனம் முடிந்து அவர்கள் ஒரு டிராக்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது சாலையோரம் இருந்த குளத்தில் அந்த டிராக்டர் கவிழ்ந்ததில் 26 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மற்றொரு விபத்து கான்பூரின் அஹிர்வான் மேம்பாலம் அருகே நடந்தது. வேகமாக வந்த லாரி, சரக்கு ஏற்றிச் சென்ற டெம்போ மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீஸ் இணை கமிஷனர் ஆனந்த் பிரகாஷ் திவாரி தெரிவித்தார். இதனிடையே டிராக்டர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்த 26 பக்தர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாகவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
முதல்வர் வேண்டுகோள்
விபத்து விவரம் அறிந்ததும் மூத்த அமைச்சர்கள் 2 பேரை சம்பவ இடத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுப்பி மீட்புப் பணிகளை விரைவுப்படுத்தியுள்ளார்.
மேலும் உயிரிழந்தோர் குடும்பம், காயமடைந்தோருக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் முதல்வர் யோகி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, “மாநில மக்கள் கோயில் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது டிராக்டர் போன்ற வாகனங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான வாகனங்களில் பயணங்களை மேற்கொள்ளவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.