வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
நவராத்திரி சுபராத்திரி
நவராத்திரி சுபராத்திரி
அலைமகளும் கலைமகளும்
கொலுவிருக்கும் ராத்திரி
அலைமகளும் கலைமகளும்
கொலுவிருக்கும் ராத்திரி
மலைமகளும் சேர்ந்து நம்மை
மகிழ வைக்கும் ராத்திரி
மலைமகளும் சேர்ந்து நம்மை
மகிழ வைக்கும் ராத்திரி
நவராத்திரி சுபராத்திரி
நவராத்திரி சுபராத்திரி…
இனிமையான இந்த பாடலை கேட்கும் போதெல்லாம்
நம் வீட்டில் கொலு வைக்க வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் தோன்றும்.
நவராத்திரி உருவான வரலாறு பற்றிய தகவல்களை தேவி மகாத்மியம் படித்து தெரிந்து கொள்ளலாம்.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி என்று போற்றப்படும் அன்னையை இந்த நவராத்திரி தினத்தில் வழிபட்டு நாம் மேன்மை அடைய வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் நான்கு நவராத்திரிகள் வருகின்றன. பங்குனியில் லலிதா நவராத்திரி,மாசியில் ராஜமாதங்கி நவராத்திரி, ஆடியில் மஹா வாராஹி நவராத்திரி, புரட்டாசியில் சாரதா நவராத்திரி. இதில் சாரதா நவராத்திரியே சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சாரதா என்பது சரஸ்வதி தேவியை குறிக்கும்.
புரட்டாசியில் வரும் மாகாளய அமாவாசைக்கு அடுத்த பிரதமை திதியில் தொடங்கி நவமி வரையில் ஒன்பது நாட்களும் பல்வேறு ரூபங்களில் அம்மன் நமக்கு அருள்பாலிக்கிறாள். மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என்று பல வகை ரூபங்கள் எடுத்தாலும் சக்தி ஒன்றுதான். இந்த தெய்வங்கள் அனைத்தையும் நம் வீட்டிற்கு அழைத்து பூஜித்து வழிபடும் விழாவே நவராத்திரி.

புரட்டாசி மாதத்தில் சூரியன் புதனுக்குரிய கன்னிராசியில் சஞ்சரிப்பார். புதன் கல்வி கலைகளுக்கு உரியவராகவும் புத்திக்காரராகவும் இருக்கிறார். அதனால் தான் கல்வி கலைகளுக்குரிய கலைமகளை இந்த மாதத்தில் சிறப்பாக வழிபாடு செய்கிறோம். ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் அவசியம். அவைகளை பெற்று வாழ்வு வளம் பெற புரட்டாசியில் அன்னை சக்தியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்று மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.
முதல் மூன்று நாட்கள் சக்தியைத் தரும் துர்க்கையாக அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை தரும் லட்சுமியாக கடைசி மூன்று நாட்கள் கல்வி, ஞானம் தரும் சரஸ்வதியாக ஆவாஹனம் செய்துவழிபடுவது வழக்கம்.
இச்சா சக்தி,கிரியா சக்தி, ஞான சக்திஆகிய மூன்று சக்திகளையும் ஒரே சமயத்தில் பெறுவதற்கு செய்யப்படும் வழிபாடு இதுதான்.
நவராத்திரி விழா பெரிய கோவில்களில் சிறப்பாக நடைபெறும். அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்து பூஜை செய்வார்கள்.
கோயில்கள் மட்டுமின்றி அரசு மற்றும் சில தனியார் வங்கிகளின் கிளைகளில்கூட நவராத்திரி கொலு வைத்திருப்பார்கள். சமீபத்தில் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கூட கொலு வைத்திருந்ததை பார்த்தேன்.
நவராத்திரி பெண்கள் கொண்டாடும் ஒரு பெரிய விழாவாகும். தங்கள் வீட்டில் கொலு வைத்திருந்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை குங்குமம் கொடுத்து அழைத்து . மங்களகரமான பொருட்கள் மற்றும் சக்கரைப்பொங்கல் சுண்டல் கொடுத்து உபசரிக்கும் பழக்கம் இன்றும் சென்னை போன்ற நகரங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நவராத்திரி வழிபாடு கிராம கோவில்களில் குறிப்பாக மாரியம்மன் கோயில்களில் 1980 களில் ஆரம்பமானது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் உள்ள திருமாகாளம் ஸ்ரீ செல்லமுத்து கோவிலில் அப்படித்தான் ஆரம்பமானது.
சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில் இது. 40 ஆண்டுகளுக்கு முன்பு தியாகராஜ சிவாச்சாரியார் அவர்கள் அதை தொடங்கி வைத்தார்.

கிராம தேவதை என்று போற்றப்படும் மாரியம்மனுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் நிச்சயம் ஒரு கோயில் இருக்கும். அந்த ஊர் மக்கள் சாதாரண கீற்று கொட்டகைகளில் அம்மனை வைத்து வழிபாடு செய்து பின்னர் காலப்போக்கில் அது பெரிய கோயிலாக மாறி விடும். ஒரு சில இடங்களைத் தவிர பெரும்பாலான இடங்களில் அந்த கோயில் உருவான வரலாறு கிடைக்காது. மன்னர்கள் கட்டிய கோயில்களுக்கு கல்வெட்டு ஆதாரங்கள் கிடைக்கும். கிராம கோயில்களுக்கான ஆதாரங்கள் கிடைப்பது அரிது.
ஆரம்ப காலங்களில் மிகவும் சாதாரணமாக இருந்த திருமாகாளம் கிராமம் செல்ல முத்து மாரியம்மன் அருள் பார்வை பட்டு நாளடைவில் வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிகமாக இருந்த நிலை மாறி படிப்பவர்கள் எண்ணிக்கை உயர ஆரம்பித்தது. கோயிலும் சிறிது சிறிதாகஉயர ஆரம்பித்தது. இன்று திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் கோவிலில் வைக்கும்
அளவுக்கு திருப்பணி செய்து சமீபத்தில் கும்பாபிஷேகம்நடத்தி முடித்தார்கள் ஊர்மக்கள். அகலமான சாலைகள், பிரகாசமான தெருவிளக்குகள் குடிசைகள் அதிகம் இல்லாத ஊர் என்று கிராமம் முன்னேறி விட்டது. சாதாரண நிலையில் இருந்த திரு.மனோகரன் என்பவர் திருப்பதி தேவஸ்தான பிராதன ஒப்பந்தக்காரர்களில் ஒருவராக உயர்ந்தது ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் அருளால்தான்.
மிகப்பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றி சென்னையில் இருக்கும் பெரிய பெரிய தனியார் கம்பெனிகளின் ஏ.சி. மற்றும் எலக்ட்ரிக்கல் சம்பந்தமான வேலைகளை எடுத்துச் செய்யும் அளவுக்கு உயர்ந்தவர் திரு.குருசாமி தாஸ் அவர்கள். இவை இரண்டும் செல்லமுத்து மாரியம்மன் திருவருளுக்கு சான்றாக உள்ள நிகழ்வுகள்.
ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் வருடா வருடம் நவராத்திரி விழா உபயதாரர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. திரு.தியாகராஜ சிவாச்சாரியார் அவர்களுக்குப் பிறகு அவரது மகன் திரு. மாது புரீஸ்வர சிவாச்சாரியார் அவர்கள் அதனை நடத்தி வருகிறார். இவரின் தாத்தா சோமசுந்தர சிவாச்சாரியார் காலம் தொட்டே இவ் வட்டாரத்தில் உள்ள அனைத்து கோயில் விசேஷங்களுக்கும் அலங்காரம் செய்வதுபாரம்பரியமாக அவர்களிடம் இருந்து வருகிறது.
நவராத்திரி 9 நாட்களும் ஒன்பது விதமான அலங்காரங்களை ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மனுக்கு செய்வார்கள்.
முதல் நாள் அலங்காரம் – ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
=========================================
பண்டாசுரன் என்ற அரக்கனை வதம் செய்து தேவர்களின் துயர் துடைத்து அவர்களின் ராஜவாழ்வை மீட்டுத் தந்தவள் அன்னை ராஜராஜேஸ்வரி. தன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கு அனைத்து வரங்களையும் தந்து ராஜ யோகம் தருவாள் என்பது சத்தியம். ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் அழியாத ஐஸ்வர்யங்களையும், உயர்வையும் தரவல்லது.
அஷ்டகம் என்றால் எட்டு. ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் எட்டு ஸ்லோகங்களும் அழியா செல்வம், அந்தஸ்து,புகழ்,பதவி,நோயற்ற வாழ்வு, உயர் கல்வி ஆகியவற்றை அளிக்க வல்லது. ராஜராஜேஸ்வரி அஷ்டகத்தை நமக்கருளியது ஆதிசங்கரர்.
ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்
அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமா பார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவி !
ஸாவித்ரி நவயௌவன ஸுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மி ப்ரதா சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர
விளக்கம்: தாய், சாம்பவி, சந்த்ரமௌளி, அபலா, அபர்ணா, உமா, பார்வகாளி, ஹிமவானின் புதல்வி, சிவா, முக்கண்ணளான காத்யாயநீ, பைரவீ, சாவித்ரீ, புதுப்புது இளமைத்தோற்றம் உடையவர், சுபத்தைத் தருபவள், சாம்ராஜ்ய லக்ஷ்மியை அளிப்பவள் இவளே ஆத்ம ஸவரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆவாள்.
(மேற்கண்ட சுலோகம் ‘வேதம் புதிது’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள் நூறு நிலவா’ பாடலின் இடையே வரும்.)

இரண்டாம் நாள் அலங்காரம் – மதுரை மீனாட்சி ==============================================
மீனாட்சி அம்மனை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் என்றும் சுபிட்சம் நிலைக்கும் என்று நம்பிக்கை. மீனாட்சி அம்மன் நவக்கிரகங்களில் புதன் கிரகத்தின் அம்சம் கொண்டவராக இருக்கிறார். அவரை வழிபட்டால் புதன் கிரக தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும். மதுரை அரசாளும் மீனாட்சி இந்த நவராத்திரி திருநாளில் இந்த அலங்காரம் மூலம் நம் ஊருக்கே வந்து அருள் புரிவதாக கிராம மக்கள் நம்புகிறார்கள்.
மீனாட்சி அம்மன் காயத்ரி மந்திரம்
ஓம் உந்நித்ரியை வித்மஹே
ஸுந்தப ப்ரியாயை தீமஹி
தந்நோ மீனாதேவீ ப்ரசோதயாத் –
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பலனாக பெண்களுக்கு அழகு கூடும், அற்புதமான கணவன் அமைவார், வீட்டில் சுபிட்சம் பெருகும், மன நிம்மதி அதிகரிக்கும். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரங்களை அம்மனுக்கு செய்து பூஜை நடத்தி நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அரக்கர்களை வதம் செய்ய அன்னை பராசக்தி துர்கா தேவி யாக வடிவம் மாறினாள். தீயவைகள் அழிந்து நல்லது நடக்க துர்க்கையின் அருள் பெற வேண்டி நடத்தப்படும் ஹோமம் தான் மகா சண்டி ஹோமம். இந்த ஹோமம் சரஸ்வதி பூஜை அன்று திருமாகாளம் மாரியம்மன் கோவிலில் தொடர்ந்து நடந்து வந்தது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் சிறு தடை ஏற்பட்டுள்ளது. அம்பாள் அனுக்கிரகத்தால் அது மீண்டும் தொடங்கும்.
விஜயதசமி அன்று வன்னி மரத்தில் ஓடி ஒளிந்த அரக்கனை அன்னை மகிஷாசுரமர்த்தினி குத்தி கொன்ற நிகழ்வு ..(அம்பு போடுதல்…வாழை மரத்தில் வன்னி கிளைகளை பதித்து அதை வெட்டுதல்) இந்த கோயிலில் நடக்கிறது.
எல்லாம் வல்ல ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் அருளால் அனைவரும் நலமாக வளமாக வாழ்வார்கள்.
அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
மகிஷாசுரமர்த்தினி சுலோகத்தோடு முடிக்கிறேன்.
===
திருமாளம் எஸ். பழனிவேல்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.