புதுடெல்லி: குஜராத், இமாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என ஏபிபி சி-வோட்டர் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவைகளுக்கு வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இவ்விரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி, குஜராத்திலும் ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் குஜராத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இவ்விரு மாநிலங்களிலும் எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து ஏபிபி சி-வோட்டர் சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:
குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களிலும் ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்கும். குஜராத்தில் மொத்தம் உள்ள 182 இடங்களில் பாஜக 135 முதல் 143 இடங்களில் வெற்றி பெறும். எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸுக்கு 36 முதல் 44, ஆம்ஆத்மிக்கு 0 முதல் 2, பிற கட்சிகளுக்கு 3 இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு 46.8%, காங்கிரஸுக்கு 32.3%, ஆம் ஆத்மிக்கு 17.4% வாக்குகள் கிடைக்கும். இப்போதைய குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆம் ஆத்மியின் அறிவிக்கப்படாத முதல்வர் வேட்பாளருக்கு 2-ம் இடமும் முன்னாள் முதல்வர் விஜய் ருபானிக்கு 3-ம் இடமும் கிடைத்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 இடங்களில் ஆளும் பாஜகவுக்கு 37 முதல் 45 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸுக்கு 21 முதல் 29 இடங்களும் ஆம் ஆத்மிக்கு 0 முதல் 1 இடமும், பிறகட்சிகளுக்கு 3 இடங்களும் கிடைக்கும்.
பாஜகவுக்கு 45.2% வாக்குகளும், காங்கிரஸுக்கு 33.9% வாக்குகளும், ஆம் ஆத்மிக்கு 9.5% வாக்குகளும் கிடைக்கும். குஜராத்தைப் போலவே இமாச்சலிலும் இப்போதைய முதல்வர் ஜெய்ராம் தாக்குர் மீண்டும் முதல்வராக அதிகப்படியானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் 2-ம் இடத்திலும், காங்கிரஸின் பிரதிபா சிங் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.