`நல்ல காரியங்களை தசமியில் தொடங்குங்கள்… வெற்றி நிச்சயம்!’ – விஜயதசமி அபூர்வ தகவல் தொகுப்பு!

விஜய தசமித் திருநாள் (5.10.22) நமக்குக் காரிய வெற்றியை அருளும் திருநாள் விஜயதசமி. இந்த நாளில் எந்தவொரு புதிய முயற்சிகளைத் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம் என்பது நம்பிக்கை. இந்தத் தினத்தில் என்னென்ன காரியங்களைத் தொடங்கலாம், விஜய தசமியின் மகிமைகள் என்னென்ன விரிவான விளக்கங்கள் உங்களுக்காக!

புதிய தொழில்கள் தொடங்குவது, பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க, இசை, பாட்டு, நடனம் போன்ற கலைகளைக் கற்கத் தொடங்கவும் உகந்த நாள் இந்தத் தினம். இந்த நாளில் அவரவர் தங்களின் குரு மற்றும் ஆசிரியரைச் சந்தித்து ஆசிபெறுவது மிகவும் சிறப்பு.

அட்சராப்யாசம்

இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர். இதனை ‘அட்சராப்யாசம்’ என்பர்.

அம்பாள் அசுர வதத்தை முடித்து வெற்றித் திருமகளாக, பக்தர்களுக்கு அறக்கருணை பொழியும் அன்னையாக அருள்பாலிக்கும் திருநாளே விஜய தசமி. இந்த நாளில் ஆயுர் தேவியைப் போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.

விஜயதசமி திருநாளில், சிவாலயங்களில் பரிவேட்டை உற்சவம் நடைபெறும். அப்போது சிவனார் வீதியுலா வந்து, வன்னி மரத்தில் அம்புத் தொடுக்கும் வைபவம் நடைபெறும். ஆத்மாவுடன் கூடிய மனித உடலே வன்னி மரம். ஞானமாகிய அம்பு தொடுத்து, அஞ்ஞான இருளை அழித்து ஆத்மாவுக்கு இறைவன் அருள்பாலிக்கும் ஐதீகத்தை விளக்குவதே பரிவேட்டை வைபவம்!

பெருமாள் கோயில்கள் சிலவற்றில் வன்னி மரக்கிளையை வைத்து, அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து, பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்துகொண்டால், கிரக தோஷங்கள் விலகி ஓடிவிடும் என்று நம்புகிறார்கள்.

ராவண வதம்

வட இந்தியாவில் விஜயதசமி திருநாளில், ‘ராம லீலா’ சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த நாளில், ராவணனின் உருவ பொம்மையை தீயிட்டு எரிப்பது வழக்கம். ஆனால், மத்தியப் பிரதேசத்தில் உள்ள கோன்புரா எனும் கிராமத்தில், ராவணனின் பிரமாண்டமான சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.

தென்காசி – குற்றாலம், அருள்மிகு குற்றாலநாத ஸ்வாமி ஆலயத்தின் வடக்கே அமைந்திருக்கிறது பராசக்தியின் ‘தரணி பீடம்’. பூமா தேவியாக இருந்து மாறியவள் என்பதால், தரணி பீடம் என்று பெயர் பெற்றதாம். விஜயதசமி – வெற்றிக் கொடி நாட்டும் நாள் என்பதன் அடையாளமாக முரசு, மத்தளம் மற்றும் சங்கநாதம் முழங்க பூஜைகள் நடைபெறும்.

மாங்காடு காமாட்சி அம்மன்

சென்னை – கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது மாங்காடு. இங்குள்ள காமாட்சியம்மன் ஆலயத்தில், அர்த்தமேரு ஸ்ரீசக்ர தரிசனம் விசேஷம். 45 திரிகோணங்களுடன் திகழும் இந்தச் சக்கரம் ‘அஷ்ட கந்தம்’ என்னும் எட்டு வகை மூலிகைகளால் செய்யப்பட்டது என்பதால், அபிஷேகம் கிடையாது; சந்தனம் – புனுகு சாத்தி வழிபடுகின்றனர். விஜயதசமியன்று அஷ்டகந்த மூலிகைச் சாத்தப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.