ஜம்மு, ஜம்மு – காஷ்மீரில், மூத்த போலீஸ் அதிகாரியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியோடிய, அந்த வீட்டின் வேலையாள், தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் கைது செய்யப்பட்டார். ஜம்மு – காஷ்மீரில் சிறைத் துறை டி.ஜி.பி.,யாக பணியாற்றியவர் ஹேமந்த் லோகியா. இவரது வீட்டில் யாஷிர் லோஹர், 23, என்ற இளைஞர் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் ஹேமந்த் லோகியா வீட்டில் இருந்தபோது, அவரை யாஷிர் கடுமையாக தாக்கியுள்ளார். கூர்மையான ஆயுதத்தால் அவரது கழுத்தை அறுத்ததுடன், தலையணையில் தீயை பற்ற வைத்து, அதை ஹேமந்தின் முகத்தில் வீசி காயப்படுத்தி உள்ளார்.
வீட்டிற்குள் தீ எரிவதைப் பார்த்த வெளியில் இருந்த போலீசார், உள்ளே சென்றனர். இதையடுத்து யாஷிர் அங்கிருந்து தப்பி ஓடினார்.உயிருக்கு போராடிய ஹேமந்த், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதற்குள், போலீஸ் அதிகாரியை, பயங்கரவாதி கொலை செய்து விட்டதாக தகவல் பரவியது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், தீவிரமான தேடுதல் வேட்டைக்குப் பின், யாஷிர் லோஹரை கைது செய்தனர்.இது குறித்து ஜம்மு – காஷ்மீர் டி.ஜி.பி., தில்பக் சிங் கூறியதாவது:இந்த படுகொலைக்கும், பயங்கரவாதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.குற்றவாளி தப்பி ஓடிய கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளன. தப்பியோடியதை நேரில் பார்த்த போலீசாரின் சாட்சி உள்ளது. குற்றவாளி யாஷிர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்து வருகிறோம். கொலைக்கான காரணம் விரைவில் தெரியவரும். இந்த சம்பவம் நடந்தபோது, வீட்டில் ஹேமந்த் லோகியாவும், யாஷிரும் மட்டுமே இருந்துள்ளனர்; வீட்டுக்கு வெளியில் போலீசார்இருந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement