ஆளும் கட்சியை சேர்ந்த சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இன்று பிற்பகல் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.
புதிய அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் இந்த சந்திப்பில் மிக முக்கியமாக கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்றிய பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கலந்துரையாடலில் மொட்டு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான எஸ்.பி. திஸாநாயக்க, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அலுவலகத்தில் இருந்து வெளியேறிய பந்துல குணவர்தன
எவ்வாறாயினும், இந்தக் குழு இந்தக் கலந்துரையாடலுக்காக நாடாளுமன்றத்தின் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வந்தபோது, அமைச்சர் பந்துல குணவர்தன ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாக அறியமுடிகிறது.
இந்நிலையில், அமைச்சர் பந்துல குணவர்தன இல்லாமலேயே உரிய கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும் என இந்தக் குழுவின் பிரதிநிதி ஒருவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து ஜனாதிபதியுடனான கலந்துரையாடலை நிறுத்திக் கொண்டு அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து வெளியேறியதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியிடம் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி.திஸாநாயக்க நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கு மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியான அர்ப்பணிப்பை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு நிலை இருந்தும் இதுவரையில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாமை தொடர்பில் மொட்டு கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மொட்டு கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்முடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெறத் தயாராக இருந்தமையினால் இந்த நியமனங்கள் தாமதமாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரும் அரசாங்கத்துடன் இணையமாட்டார்கள் என உறுதியாக கூறமுடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே அமைச்சரவையில் எஞ்சியுள்ள வெற்றிடங்களை இனியும் தாமதிக்காமல் நிரப்புமாறு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.