சண்டிகர்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இந்தியக் குடும்பம் ஒன்று படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கோரிக்கை விடுத்துள்ளார்.
4 பேர் படுகொலையும் பின்னணியும்: அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் ஒன்று கலிஃபோர்னியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் அச்சமும் கவலையும் நிலவுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலிஃபோர்னியா மாகாணத்தில் 8 மாதக் குழந்தை அரூஹி தேரி, அவரது பெற்றோர் ஜஸ்லீன் கவ்வுர் (27) அவரது கணவர் ஜஸ்தீப் சிங் (36), இவர்களது உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் வடக்கு கரோலினாவின் மெர்சட் கவுன்டியில் இருந்து கடத்தப்பட்டனர். இதனையடுத்து மெர்சட் கவுன்டி ஷெரீஃப் வெர்ன் வார்ன்கே உத்தரவின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து காணாமல் போனவர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், காணாமல் போன 4 பேரின் சடலமும் இண்டியானா சாலை மற்றும் ஹட்ச்ஹின்சன் சாலை ஒட்டிய ஒரு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. அருகிலிருந்த விவசாய நிலத்தில் விவசாயம் செய்துகொண்டிருந்த நபர் சடலங்கள் கிடப்பது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் 4 பேரின் சடலமும் மீட்கப்பட்டது. இந்தக் கடத்தல் தொடர்பாக ஜீஸஸ் மேனுவல் சால்கடோ என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கடத்தல் சம்பவம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்துவதாக கவுன்டி ஷெரீஃப் வெர்ன் வார்ன்கே தெரிவித்துள்ளார். கொலையான குடும்பத்தின் பூர்விகம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் பகுதியில் ஹர்ஷி பிண்ட். இவர்கள் அனைவரும் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.
பகவந்த் மான் ட்வீட்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “கலிஃபோர்னியாவில் குழந்தை உள்பட 4 இந்தியர்கள் கொலை வேதனை அளிக்கிறது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். இதேபோல் சிரோன்மணி அகாலி தல தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறுகையில், அமெரிக்க அதிகாரிகளுடன் பேசி அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் அண்மைக்காலமாக இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கனடா வாழ் இந்தியர்கள், கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய அரசு அண்மையில் எச்சரிக்கை நோட்டீஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
பதைபதைக்க வைக்கும் வீடியோ: ஜஸ்தீப், அமன்தீப் சிங் குடும்பத்தினர் கடத்தப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அதில் ஜஸ்தீப், அமன்தீப் பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் ஒரு ட்ரக்கில் ஏற்றப்படுகின்றனர். பின்னர் ஜஸ்லீன் மற்றும் அவரது 8 மாதக் குழந்தை அதே ட்ரக்கில் ஏற்றப்படுகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.