டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்கு மக்களிடையே நல்ல ஆதரவு உள்ளது.
இந்நிலையில் டெல்லியில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக, துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
இந்த சோதனையின்போது, அதிகாரிகளின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியானாலும் அது, வதந்தி என்பது நாளடைவில் தெரிந்தது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மணிஷ் சிசோடியா, ‘சிபிஐயால் 2 அல்லது 3 நாளில் நான் கைது செய்யப்படலாம். மேலும் எனது செல்போன், லேப்டாப் ஆகியவற்றை எடுத்து சென்றுவிட்டனர். ஆனாலும் நாங்கள் பயப்பட போவதில்லை’ என கூலாக கூறி இருந்தார்.
இந்த விவகாரம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதே சமயம் பாஜகவுக்கும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், இடையிலான மறைமுக போரானது டெல்லி ஆளுநர் மூலம் நாளுக்குநாள் அரங்கேறியபடி தான் இருக்கிறது.
அந்த வகையில் ஆளுநர் சக்சேனாவை தாக்கி சமீபத்தில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் டெல்லியில் பாஜக ஆளும் நகராட்சி துறைகளில் ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.
அதை நீங்கள் பார்ப்பதில்லை. ஏனென்றால் அந்த ரூ.6 ஆயிரம் கோடி ஊழலில் பாஜகவுக்கு அதனுடன் தொடர்பு உள்ளது’ என்று தெரிவித்து இருந்தார். இக்கடிதம் பாஜக வட்டாரத்தில் பெரும் கிலியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் டெல்லி ஆளுனர் சக்சேனாவை தாக்கி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளது பெரும் பரபரப்பையும், டெல்லி அரசியலில் அனலையும் கிளப்பி உள்ளது.
அதாவது ஒவ்வொரு நாளுமே துணை நிலை ஆளுனர் என்னை எவ்வளவோ திட்டிக்கொண்டே இருக்கிறார். எனது மனைவியே அப்படி செய்வது கிடையாது. கடந்த 6 மாதங்களில் ஆளுனர் எழுதியதுபோல் என் மனைவி கூட இவ்வளவு காதல் கடிதங்களை எனக்கு எழுதியதில்லை.
கவர்னர் அவர்களே.. சற்று குளிர்ச்சி அடையுங்கள். உங்களுடைய தலைவரிடமும், குளிர்ச்சி அடைந்து தணிந்து இருக்குமாறு கூறுங்கள்’ என டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
இதற்கு சக்சேனா தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை என்றாலும் டெல்லி அரசியலில் பாஜகவுக்கும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையேயான மோதல் உச்சத்தை அடைந்து உள்ளதாகவே பரவலாக சொல்லப்படுகிறது.