எண்ணெய்யை மறுசுழற்சி செய்யும் திட்டத்தில் திண்டுக்கல்லில் கடந்த 6 மாதத்தில் பயன்படுத்திய சமையல் எண்ணெய் 48 ஆயிரம் லிட்டர் சேகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பயன்படுத்திய சமையல் எண்ணெய்யில் தயாரிக் கும் உணவைச் சாப்பிடுவதால் வயிற்றுப் போக்கு, வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதை கள் ஏற்படும்.
இதைத் தவிர்க்க ‘ரூகோ’ எனும் (சமையல் எண்ணெய் மறுசுழற்சி செய்தல்) திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் ஹோட்டல், பேக்கரி, உணவுப் பொருட்கள் தயாரிப்பகங்களில் இருந்து ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் சேகரிக்கப்படுகிறது.
அவ்வாறு சேகரித்த எண் ணெய்யை மறு சுழற்சி செய்ய திண்டுக்கல்லில் பலரும் பதிவு செய்துள்ளனர்.
சேகரிக்கும் எண்ணெய் ‘பயோ-டீசல்’ தயாரிக்க தனியார் எண்ணெய் நிறுவனத்துக்கு அனுப்பப்படுகிறது. இதன்படி, மாதந்தோறும் 3,500 லிட்டர் வரை பயன்படுத்திய எண்ணெய் சேகரிக்கப்படுகிறது. ஒரு லிட்ட ருக்கு ரூ.35 முதல் ரூ.40 வரை வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக நியமன அலுவலர் சிவராம பாண்டியன் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 48 ஆயிரம் லிட்டர் எண்ணெய் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்து உணவகங்கள், உணவு தயாரிப்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரு கிறோம், என்றார்.