சியோல், தொடர்ந்து இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்திய நிலையில், தென் கொரியாவுடனான எல்லை அருகே ஒரே நேரத்தில் 12 போர் விமானங்களை வட கொரியா அனுப்பியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.கிழக்காசிய நாடுகளான வட கொரியா மற்றும் தென் கொரியாவுக்கு இடையே கடும் மோதல் உள்ளது.
தென் கொரியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு உள்ளது. இதற்கிடையே, அணு ஆயுதங்களை வட கொரியா குவித்து வருவதற்கு தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.ஆனால், இதற்கெல்லாம் கவலைப்படாமல், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொடர்ந்து பல ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறார்.இந்நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதையடுத்து, ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி வட கொரியா இந்தாண்டில் இதுவரை, 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தி சோதனையில் ஈடுபட்டுள்ளது. வட கொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடற்படைகள் சமீபத்தில் கொரிய தீபகற்ப பகுதியில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டன.
இதையடுத்து, நேற்று ஒரு நாளில், இரண்டு ஏவுகணை சோதனைகளை வட கொரியா நிகழ்த்தியது. இதற்கு சில மணி நேரம் கழித்து, தென் கொரியாவின் எல்லைக்கு அருகில், ஒரே நேரத்தில், 12 போர் விமானங்களை அனுப்பியது.வட கொரியாவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, தென் கொரியா தன் விமானப் படையை தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது அந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement