மதுரை: நமது உரிமைக்காக போராடுவதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது என மதுரை லேடி டோக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி பேசினார்.
இக்கல்லூரியில் போட்டித் தேர்வுக்கான வழி காட்டு சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானா சிங் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி பங்கேற்று பேசியதாவது:
ஆண்டுதோறும் இக்கல்லூரிக்கு என்னை அழைப்பது மகிழ்ச்சி. ஒருவர் எல்லா செல்வங்களை பெற்றவர்களாக இருக்கலாம். அவரது ஞானத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பது முக்கியது. கரோனா நேரத்தில் அந்நிய பணிகளை செய்ததற்காக இக்கல்லூரிக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக அனைவருக்கும் பாராட்டுத் தெரிவிக்கிறேன். கல்வி, பகுத்தறிவை கல்லூரிகள் கற்றுக் கொடுக்கிறது.
மாணவிகள் தங்களை எல்லைகளை விரிவாக்கி, உதவி தேவைப்படுவோர் உதவ முன்வர வேண்டும். தமிழர்களுக்கென வரலாறு உண்டு. உலகில் சிறந்த மொழிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 மொழிகளில் தமிழும் ஒன்று. நமது வரலாற்றை மறக்கக்கூடாது. இச்சமூகம் எப்படி இருந்தது என, பகுத்தறியவேண்டும். பெரியார் காலத்தில் 1930களில் பெண்களுக்கு குடும்பச் சொத்தில் பங்கு வேண்டும் என, தீர்மானிக்கப் பட்டாலும், அது கலைஞர் ஆட்சியில் தான் நிறைவேறியது.
உலகில் சிறுபான்மை என்ற ஒரே குடையின் கீழ் வருவோர் பெண்கள் மட்டுமே. நமக்கான பிறப்பு, உரிமையை இன்றும் போராடி பெறும் நிலையில் உள்ளோம். வரலாறுகளை திரும்பி பார்க்கவேண்டும். கடந்த காலத்ததை திரும்பி பார்த்தால் எதிர்காலத்தை தீரமானிக்கலாம்.
தொன்றுதொட்டு வருவது தான் வரலாறு. இது பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். பெண்களுக்கு கொடுமை எங்கு நடந்தாலும் கண்டிக்க வேண்டும். சமூக நீதி என்பது அனைவருக்கும் பொதுவானது. பாராளுமன்றத்தில், மேடையில் பேசுவது அரசியல் அல்ல. நமது உரிமைக்காக போராடுவதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. கல்வி தரும் விஷயங்கள் ஞானமாக மாற்ற வேண்டும். இதுவே வெளியில் உங்களது பங்களிப்பாக மாறும்” இவ்வாறு அவர் பேசினார். நிகழ்வில் நாச்சியார் உள்ளிட்ட பேராசிரியைகள், மாணவிகள் பங்கேற்றனர்.