ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் – வெளியானது அரசாணை

தமிழக அரசு அனுப்பிய ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டத்திற்கு தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அச்சட்டம் அரசு இதழில் வெளியாகி உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதியே கவர்னர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில் இதற்கான அரசிதழ் இன்று வெளியாகி உள்ளது.
image
அந்த அவசர சட்டத்தில், பணத்தை வைத்து சூதாட்டங்களில் ஈடுபடும் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்ந்து, வரும் அக்டோபர் 17ஆம் தேதி கூட உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிரந்தர சட்டமாக கொண்டு வரப்படும் என தமிழக அரசு சட்டத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
image
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் கடந்த ஜூன் மாதம் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டம் தொடர்பாக ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்பட்டிருந்தது.
கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் உச்சநீதிமன்றத்தில் தடை செய்யப்பட்டதால் புதிய அவசர சட்டம் பல்வேறு தரவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
image
தண்டனை விவரங்கள் 

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத கால சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்
சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்
சூதாட்டத்தை நடத்தும் நிறுவனம் / நபர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்
இரண்டாம் முறை தவறிழைக்கும் நபர்கள்/ நிறுவனங்களுக்கு முந்தைய தண்டனையை விட இரட்டிப்பாக தண்டனை விதிக்கப்படும்
ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது
ரம்மி, போக்கர் என்ற இரு சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.