கர்நாடகா: பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் குடும்பத்துடன் யாத்திரை சென்றார் ராகுல் காந்தி.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.,யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கடந்த மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கினார். தமிழகம், கேரளாவைத் தொடர்ந்து கர்நாடகாவில் பாத யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
தசரா திருவிழா காரணமாக 2 நாட்கள் பாத யாத்திரைக்கு ஓய்வளித்த ராகுல் காந்தி, நேற்று மண்டியாவில் உள்ள பாண்டவ புராவில் பாத யாத்திரையை மீண்டும் தொடங்கினர். காங்கிரஸின் இடைக்கால தலைவரும், அவரது தாயாருமான சோனியா காந்தி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பாத யாத்திரையில் பங்கேற்றனர்.
இதனிடையே, நேற்றைய யாத்திரையில், கர்நாடகாவில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் தாயார் மற்றும் சகோதரியுடன் இணைந்து அவர்களுடன் நடந்து சென்றார் ராகுல் காந்தி.
மேலும், “கவுரி சத்தியத்திற்காக நின்றாள், கவுரி தைரியத்திற்காக நின்றாள், கவுரி சுதந்திரத்திற்காக நின்றாள் நான் கவுரி லங்கேஷுக்காக நிற்கிறேன் மற்றும் அவரைப் போன்ற எண்ணற்றோர், இந்தியாவின் உண்மையான உணர்வை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். பாரத் ஜோடோ யாத்ரா அவர்களின் குரல். அதை ஒருபோதும் அமைதியாக்க முடியாது” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.