ஆன்லைனில் ரம்மி, கடன் செயலிகளில் லோன்… நெருக்கடி தாங்க முடியாமல் விபரீத முடிவெடுத்த இளைஞர்!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா, திங்களூர் அருகேவுள்ள சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (34). இவருக்கு திருமணமாகி கீதா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும், 5 மாத ஆண் குழந்தையும் இருக்கின்றனர். கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். கிருஷ்ணமூர்த்தி ஆன்லைனில் ரம்மி சூதாட்டத்தில் ஆர்வம் கொண்டிருந்ததால் செல்போனில் ரம்மி விளையாட்டில் மூழ்கியிருக்கிறார். இதனால் கையிருப்புப் பணம் கரையத் தொடங்கியது. இதையடுத்து தன்னுடைய ஆதார் அட்டை, பான் கார்டு போன்ற ஆவணங்களைக் கொடுத்து பல ஆன்லைன் கடன் செயலிகளிலிருந்து ரூ.10 லட்சம் வரையிலும் கடன் வாங்கியிருந்தாராம். இவ்வாறு வாங்கும் கடன் தொகையை வைத்து மீண்டும் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதும், கிடைக்கும் பணத்தை அவ்வப்போது கடன் செயலியிலிருந்து பெற்ற கடனை அடைப்பதும்… மீண்டும் கடனை வாங்குவதும் என்று இருந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் ஆன்லைன் ரம்மியில் ஏற்பட்ட தொடர் தோல்வியால் கடன் செயலியிலிருந்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் கிருஷ்ணமூர்த்தி அவதிப்பட்டார். குறித்த காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தாதால் கடன் கொடுத்த ஆன்லைன் கடன் செயலி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தியை பணத்தை கட்டச் சொல்லி மிரட்டல் விடுத்ததுடன் பெற்ற கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டியை போட்டு அதையும் செலுத்துமாறு நிர்பந்தம் செய்யத் தொடங்கினர்.

தற்கொலை செய்து கொண்டவர்

அவர்களின் தொடர் மிரட்டல் காரணமாக தன்னுடைய செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டார் கிருஷ்ணமூர்த்தி.

முன்பு கடன் வாங்கும்போது ஆன்லைன் கடன் செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்த கிருஷ்ணமூர்த்தியின் செல்போனுக்கு ஓடிபி நம்பர் அனுப்பப்பட்டது. அந்த ஓடிபி எண்ணை வைத்து, கிருஷ்ணமூர்த்தியின் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த எண்களை எடுத்து அந்த எண்களுக்கு வாட்ஸ்ஆப் மூலமாக கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின் படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட ஆன்லைன் கடன் செயலி நிறுவனத்தினர் கிருஷ்ணமூர்த்தியை மிரட்டத் தொடங்கினர்.    

இளங்கோ

இதனால் வேறு வழியின்றி தனது சொந்த நிலத்தை விற்று ஆன்லைன் கடன் செயலி நிறுவனங்களுக்கு 70 சதவிகிதம் கடனை கிருஷ்ணமூர்த்தி அடைத்தார். அப்போதும் ஆன்லைன் கடன் செயலி நிறுவனத்தினர் மீதமுள்ள கடன்தொகையை கட்ட வேண்டும் என்று மிரட்டியதுடன் மீண்டும் படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்டிருகின்றனர்.

இதனால் அவமானம் தாங்காமல் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான கிருஷ்ணமூர்த்தி அவரது வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

உயிரிழந்த கிருஷ்ணமூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்கொலை குறித்து கீதாவின் அண்ணன் இளங்கோ கூறுகையில்,
“ஆன்லைன் சூதாட்டத்தால் எத்தனையோ  குடும்பங்கள் நிற்கதியாகிவிட்டன. என் தங்கையின் குடும்பமும் இப்போது தவிக்கும் நிலைக்கு ஆளாகி விட்டது. இந்த சூதாட்டத்தை அரசு உடனடியாக தடை செய்து மற்ற குடும்பங்களையாவது காப்பாற்ற வேண்டும். அதேபோல ஆன்லைன் செயலி மூலம் கடன் தரும் நிறுவனங்கள் மனிதாபிமானமின்றி பணத்துக்காக மிகவும் கேவலமாக நடந்து கொள்கிறார்கள். இவர்கள்மீதும் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் ரம்மியால் தவிக்கும் குடும்பத்துக்கு அரசு உதவிகளை செய்து தர வேண்டும்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.