கோவை: சுதந்திரப் போராட்டத்தில் பிறந்த இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் என காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகாவில் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவின் பங்கு என்ன என்பதை எங்கும் கண்டுபிடிக்க முடியாது. ஆங்கிலேயர்களுக்கு ஆர்எஸ்எஸ் உதவி செய்தது” என கூறியிருக்கிறார்.
ஆர்எஸ்எஸ் என்ற இயக்கம் பிறந்ததே சுதந்திரப் போராட்டத்தில்தான். 1925-ல் ஆர்எஸ்எஸ்ஸை தொடங்கிய கேசவ பலிராம் ஹெட்கேவார், மாகாண காங்கிரஸில் முக்கிய தலைவராக இருந்தவர். கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே, புரட்சி இயக்கங்களில் இணைந்து, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். 1925-ல் ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டது. 1947-ல் சுதந்திரம் கிடைத்தது.
மாணவர்களை கொண்டுதான், ஹெட்கேவார் ஆர்எஸ்எஸ்ஸை பெரும் இயக்கமாக வளர்த்தெடுத்தார். ஆனாலும், ஆர்எஸ்எஸ்ஸில் இருந்த பலரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள்தான். இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு தொடர்பு இல்லை என திரும்ப திரும்ப அவதூறு பரப்பி வருகிறார்கள். இது கடும் கண்டனத்திற்குரியது.
காங்கிரஸ் இருந்த, பண்டிட் நேரு அமைச்சரவையில் இருந்த சியாம பிரசாத் முகர்ஜிதான், ஜன சங்கத்தை தொடங்கினார். விடுதலைக்குப் பிறகு தொடங்கப்பட்ட அரசியல் கட்சிகளை தொடங்கியவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸில் இருந்து, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள்தான். இடத்திற்கு இடம் ஒரே வேஷம் போட்டு மக்களை ஏமாற்றி, எப்படியாவது தேர்தலில் வென்றுவிடலாம் என நினைத்து பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.
இந்திய மக்களின் பண்பாடு, கலாசாரத்திற்கு, உணர்வுகளுக்கு எதிரான சிந்தனை கொண்ட ராகுல் காந்தியால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.