“இந்தியாவில் நிலவிவரும் பயங்கரவாதம், அமைதியின்மை காரணமாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்” என அமெரிக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் செல்வோருக்கு உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்குவது வழக்கமான ஒன்றெனக் கூறப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டும் வழிகாட்டு நெறிமுறை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக அமெரிக்க உள்துறை, “இந்தியாவில் நிலவிவரும் பயங்கரவாதம் மற்றும் குற்றச்செயல்கள் காரணமாக இந்தியாவுக்கு செல்லும் அமெரிக்கர்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். ஆயுத மோதல் இருப்பதால் இந்தியா – பாகிஸ்தான் எல்லையின் 10 கிலோமீட்டர் அருகே செல்ல வேண்டாம். குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்.

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதாக இந்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக பாலியல் குற்றங்கள் போன்ற மோசமான வன்முறைகள் சுற்றுலாத் தலங்கள் மற்றும் பிற இடங்களில் நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டும் இது மாதிரியான அறிவுரைகள் வழங்கப்பட்டன” எனத் தெரிவித்திருக்கிறது.