கீவ்-உக்ரைனின் ஸபோரிஸ்சியா பகுதியில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில், பல அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம் அடைந்தன; 17 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துஉள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளான, உக்ரைன் – ரஷ்யா இடையே நடந்து வரும் போரில், உக்ரைனின் முக்கிய பகுதியான ஸபோரிஸ்சியா மீது, ரஷ்ய படையினர் கடந்த சில நாட்களாக தாக்குதலை அதிகரித்து வருகின்றனர்.
நாட்டின் மிக முக்கிய அணு உலை இந்த பகுதியில் இருப்பதால், இது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. ஸபோரிஸ்சியா மீது நடத்தப்படும் தாக்குதலை, பல்வேறு உலக நாடுகளும் கண்டித்து வருகின்றன.
இந்நிலையில், ஸபோரிஸ்சியாவின் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு, ரஷ்ய படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில், ஐந்து வீடுகள் முற்றிலுமாக தகர்க்கப்பட்டன; 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. இதில், 17 பேர் வரை உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.
இதற்கிடையே, ரஷ்யா – கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் 19 கி.மீ., துார கெர்ச் கடல் பாலம் நேற்று முன்தினம் தகர்க்கப்பட்டது. இந்த தாக்குலுக்கு இருதரப்பு ராணுவமும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், ரஷ்யாவுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
![]() |
ரஷ்யாவில் இருந்து உக்ரைனுக்கு ஆயுதங்கள் எடுத்து வர இந்த பாலம் பயன்படுத்தப்பட்டது. இந்த தாக்குதலால் அதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கெர்ச் கடல் பாலம் மற்றும் ரஷ்யாவின் எரிவாயு குழாய்களுக்கு அதிதீவிர பாதுகாப்பு வழங்க, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுஉள்ளார்.
ரஷ்யாவின், எப்.எஸ்.பி., எனப்படும் ‘பெடரல்’ பாதுகாப்பு அமைப்பினர், பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்