சென்னையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது, “தமிழர்களின் சுயமரியாதை மற்றும் தமிழகத்தின் நலனை காக்கின்ற திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். உங்களில் ஒருவனான தன்னை தலைவராக தேர்ந்தெடுத்த கோடான கோடி தொண்டர்களுக்கு நன்றி. ஒவ்வொரு உடன்பிறப்பாலும் நான் தலைவராகியிருக்கிறேன்.
நீங்கள் இருக்கும் தைரியத்தில் தான் நான் இந்த பொறுப்பை ஏற்றிருக்கிறேன். கலைஞர் மறைவிற்கு பிறகு இந்த எளியன் தலையில் தலைமை பொறுப்பு சுமத்தப்பட்டது. உழைப்பு, உழைப்பு என்று பாராட்டப்பெற்றதால் கிடைத்த பொறுப்பு இது ஆகும்.
“நான் அண்ணாவும் அல்ல, கலைஞரும் அல்ல, கலைஞரால் பாராட்டப்பட்டு தலைவரானவன் நான். தொண்டர்களால் தான் நான் தலைவராக இங்கு நிற்கிறேன். என் முகத்தை பார்த்தாலே உங்களுக்குத் தெரியும், கட்சியில் உள்ள சிலரது செயலால் தூக்கமில்லாமல் தவிக்கிறேன். துன்பப்படுத்துவது போல் அமைச்சர்களோ, நிர்வாகிகளோ நடந்து கொண்டால் நான் என்ன செய்வது. திமுகவில் பதவிக்காக அல்ல, உழைப்பதற்காக போட்டி இருக்கிறது.
நான் தலைவரானது முதல் திமுகவுக்கு ஏறுமுகம் தான் இருக்கிறது. சட்டமன்ற தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் திமுகவின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. செல்வாக்கு உயர்ந்திருப்பதுதான் பயத்தை உருவாக்கியிருக்கிறது. நற்பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே சிந்தனையாக உள்ளது.
சிலர் பொது இடங்களில் நடந்த கொண்ட விதத்தால் பழிகளுக்கும், ஏளனத்திற்கும் உள்ளாகியது. திமுக பழுத்த மரமாக இருப்பதால் தானே அனைவரும் கல் எறிகிறார்கள்; திமுக பழுத்த மரம் மட்டுமல்ல கல் கோட்டை. மழை பெய்யவில்லை என்றாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். மழை அதிகமாக பெய்தாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள்.
நிர்வாகிகளின் அனைத்து செயல்பாடுகளையும் நானே நேரடியாக கண்காணிப்பேன். இனி தமிழகத்தை திமுக தான் ஆளப்போகிறது என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை. நாம் பெற்ற வெற்றியை நிரந்தரமாக தக்கவைக்க வேண்டும்” என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.