பேராவூரணி: பேராவூரணி அருகே மழைகாலத்தில் சடலம் எடுத்து செல்லும் போது வழுக்கி நிலையில் உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என்று வழுதலைவட்டம் கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர். பேராவூரணி ஒன்றியம் வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு ஊராட்சி, வழுதலை வட்டம் கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் சாலை மண் சாலையாக இருப்பதால், மழைக்காலங்களில் சேறும், சகதியுமாகி சடலத்தை தூக்கி செல்ல இப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். சடலங்களை தூக்கி செல்லும் போது சுமந்து செல்வோர் சகதியாக உள்ள களிமண் சாலையில் வழுக்கி விழுந்து சடலங்கள் சாலையில் தவறி விழும் அவலம் ஏற்படுகிறது.
மண் சாலையை தார்சாலையாக மாற்ற கோரி இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், கலெக்டர், முதலமைச்சரின் தனிப்பிரிவு என பல இடங்களுக்கும் மனு அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனையோடு கூறுகின்றனர். இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் சார்பில், சமூக ஆர்வலர் சேகர், தஞ்சாவூர் கலெக்டரை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளது.
இப்பகுதியில் 80 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் வசித்து வருகிறோம். இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த மயானச் சாலை செப்பனிடப்படாமல், சேறும் சகதியுமாக களிமண் சாலையாக உள்ளது.மழைக்காலங்களில் சடலங்களை எடுத்துச் செல்ல முடியாத வகையில், சடலங்களை சுமந்து செல்வோர் கால் மண்ணில் புதைந்து விடுகிறது. சில நேரங்களில் சடலம் தவறி தரையில் விழும் அவலம் உள்ளது.
கடந்த 70, 80 ஆண்டுகளாகவே இந்த சாலை இப்படியே உள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. அதிகாரிகள் இந்த சாலையை ஆய்வு செய்து மதிப்பீடு தயாரித்து அனுப்பியும், இன்னும் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இறுதிக் காலத்தில் கூட சடலங்களை கவுரவமாக சென்று அடக்கம் செய்ய முடியாத நிலை உள்ளதால் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மயான சாலையை ஆய்வு செய்து தார் சாலை அமைத்து தரவேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.