நிலம் வாங்குவதற்காக கடன் வாங்கி கொடுத்தார் ரூ.2 கோடியை நண்பர் ஏமாற்றியதால் மனைவியுடன் வியாபாரி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது; மிரட்டியவர் குறித்து விசாரணை

சூளகிரி: சூளகிரி அருகே ரூ.2 கோடி கடனை திருப்பி கொடுக்க முடியாத விரக்தியில், தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது நெருங்கிய நண்பருக்கு பணத்தை வாங்கி கொடுத்ததாக, தற்கொலை செய்து கொண்டவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி, போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், செம்மறிகுளத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(47). இவரது மனைவி கிருஷ்ணவேணி(44). கடந்த 15 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில்  வசித்து வந்தனர். இவர்களின் 13, 10 வயது மகள்கள் தனியார் பள்ளியில், 7 மற்றும் 5ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

சிவகுமார் 3 மளிகை கடைகளை நடத்தி வந்தார். பள்ளி காலாண்டு விடுமுறையையொட்டி, 2 மகள்களையும் கோவையில் உள்ள கிருஷ்ணவேணியின் தாயாரிடம் அனுப்பி வைத்திருந்தனர். நேற்று காலை, மளிகை கடை ஊழியர்கள் கடை சாவியை வாங்குவதற்காக சிவகுமார் வீட்டுக்கு வந்தனர். அப்போது கதவு சாத்தப்பட்ட நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, சிவகுமாரும், கிருஷ்ணவேணியும் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.தகவலின் பேரில், சூளகிரி போலீசார் வந்து சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் சிவகுமார் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில், கடனாக வாங்கிய 2 கோடி ரூபாயை, எனது நெருங்கிய நண்பர் ஒருவருக்கு கொடுத்து ஏமாந்து விட்டேன்.

அதை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதப்பட்டிருந்தது. முதல்கட்ட விசாரணையில், சிவகுமாரிடம் அவரது நண்பர்கள் சிலர், நிலம் வாங்கிப் போட்டால் பல கோடிக்கு விற்பனை செய்யலாம் என கூறியுள்ளனர். அதை நம்பிய சிவகுமார், பலரிடம் கடன் வாங்கி சிறிது, சிறிதாக ரூ.2 கோடி வரை நண்பர் ஒருவரிடம் கொடுத்துள்ளார். அந்த நபர், கூறியபடி நிலம் எதையும் வாங்கித் தரவில்லை. இதனிடையே, கடன் கொடுத்தவர்கள், திருப்பித் தரும்படி கேட்டு வந்துள்ளனர். இதனால் அவர், மனைவியுடன் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனிடையே, சிவகுமாருக்கு கடன் கொடுத்த ஒரு நபர், நேற்று முன்தினம் இரவு, அவரை மிரட்டி விட்டு சென்றதாக, போலீசாரிடம் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். அவரை மிரட்டிய நபர் யார் என்று போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.