வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் மறைந்தார்!

வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வு காரணமாக இன்று (அக்டோபர் 10) சென்னை கே.கே. நகரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 94.

இவர் 1928 ம் வருடம் திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் பிறந்தார். சுப்பு ஆறுமுகம் தனது வில்லுப் பாட்டின் வாயிலாக சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடையே ஆன்மிகம், தேச பக்தியை வளர்த்து வந்தார்.

14 வயது குமரன் பாட்டு என்ற கவிதை தொகுப்பு மூலம் பிரபலமடைந்தார். நடிகர் நாகேஷின் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு நகைச்சுவை பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதியுள்ளார்.

கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக வில்லுப்பாட்டு கச்சேரியினை நடத்தி வந்தார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தன் வில்லுப்பாட்டினால் மக்கள் மனதை கவர்ந்தவர். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை வில்லுப்பாட்டின் வாயிலாக வழங்கினார்

இவர் வில்லுப்பாட்டினை மறைந்த பழம்பெரும் திரைப்பட நடிகர் என்.எஸ் கிருஷ்ணன் மற்றும் சுப்பையா பிள்ளை போன்றவர்களிடம் கற்றார்.

வில்லிசை வேந்தர் என போற்றப்படும் சுப்பு ஆறுமுகம் 1975ஆம் ஆண்டு கலைமாமணி விருதையும், சங்கீத நாடக அகாடமி விருதையும் பெற்றார். 2021ஆம் ஆண்டு ஒன்றிய அரின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினை பெற்றார். சுப்பு ஆறுமுகத்தின் மறைவு குறித்து பல தலைவர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.