திருவண்ணாமலை: ஆங்கிலத்துக்கு எதிர்மறையான நிலைபாட்டை எடுத்தால் இந்திய மாணவர்களின் எதிர்காலம் சூனியமாகிவிடும் என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ எச்சரித்துள்ளார்.
சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி திருவண்ணாமலை தேரடி வீதியில் இன்று (11-ம் தேதி) மாலை மனித சங்கிலி நடைபெற்றது. விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, காங்கிரஸ், மமக, எஸ்டிபிஐ, சிபிஐ-எம்எல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சமூக நீதி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
மனித சங்கிலியில் பங்கேற்ற மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஆர்எஸ்எஸ் என்பது அமைப்பு அல்ல. மதத்தின் பெயரால் மக்களிடையே பிரிவு உணர்வை வளர்க்கும் நாசகார சக்திகள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான், இந்திய நாட்டின் அடையாளம். ஓரே நாடு, ஓரே மதம், ஓரே கலாச்சாரம், ஓரே உணவு, ஓரே மொழி என மலிவான பிரிவினை அரசியலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை.
நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் முன்னேற்றத்துக்காக ஆங்கில மொழியை அகற்றிவிட்டு இந்தி மொழியை கொண்டு வர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார். ஆங்கிலம் என்பது இணைப்பு மொழியாக உள்ளது. உலகளவில் மென்பொருள், மருத்துவம் என அனைத்து துறைகளிலும் இந்திய மாணவர்கள் சிறந்த வல்லுநர்களாக திகழ்கின்றனர். இதற்கு ஆங்கிலம் ஒரு காரணம். உலகமே ஆங்கிலத்தை அரவணைத்து முன்னேற்ற பாதையில் செல்கிறது. இதற்கு எதிர்மறையாக இந்தியாவில் ஒரு நிலைபாடு எடுத்தால், இந்திய மாணவர்களின் எதிர்காலம் சூனியமாகிவிடும்.
நாட்டின் வளர்ச்சியை புறம் தள்ளிவிட்டு, மக்களிடையே வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையில் அரசியல் செய்கின்றனர். இதற்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை தெரிவிக்கும் வகையில், ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து, சமூக நல்லிணக்கத்துக்காக மனித சங்கிலியை நடத்துகிறது” என்றார். பின்னர், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழக ஆளுநருக்கு கண்டனம்: திருவண்ணாமலை பெரியத் தெருவில் உள்ள மதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை துரை வைகோ சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “புதிய கல்வி கொள்கை மூலம் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கின்றனர். இந்தியை எதிர்த்து 1965-ல் நடைபெற்ற மொழி போரை விட விரீயமான போராட்டம் வெடிக்கும்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 16 மசோதாக்கள் நிறைவேறாமல் இருப்பதற்கு ஆளுநர் ரவிதான் காரணம். மக்களுக்கு நல்லதை செய்யாமல், திருவள்ளுவருக்கு காவி வேஷம் போட்டு, ஒரு மதத்துக்குள் சுருக்க நினைக்கிறார். நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், ஜனநாயகத்துக்கு எதிரான சக்திகள், இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து, மதத்தால் நாட்டை பிரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. ஆளுநர், தனது பணியை செய்ய வேண்டும். மத ரீதியான கருத்துகளை சொல்வது தவறானது. பாரதம் மற்றும் திராவிடத்துக்கு புதிய அர்த்தத்தை தெரிவித்துள்ளது தவறு. ராஜராஜ சோழனுக்கும், இதேபோன்ற கருத்தை தெரிவிக்கக்கூடும்” என்றார்.