ஈரானில் ஹிஜாபை எரித்துப் போராடிய நிகா என்ற 17 வயது சிறுமி இறந்த விவகாரத்தில், குற்றச்சாட்டை மறுத்த பாதுகாப்புப் படையினர், சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர். ஆனால், அதிலிருப்பது தன் மகளல்ல என்று அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.
ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் ஹிஜாப் அணிவது சமீபத்தில் கட்டாயமாக்கப்பட்டது. இந்த கட்டுப்பாட்டுக்குப் பின் வந்த சில நாள்களில், அந்நாட்டின் தெஹ்ரான் பகுதியிலிருந்த சில பெண்கள் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்பதற்காக, அங்கிருந்த பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்டனர். அந்த தாக்குதலால் பாதிக்கப்பட்ட, 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண், கடந்த மாதம் 17-ம் தேதி உயிரிழந்தார்.

மாஷா மீதான வன்முறையை கண்டித்து ஈரான் முழுவதும் பல பெண்கள் கட்டாய ஹிஜாப்புக்கு எதிராகக் களத்தில் இறங்கினர். குறிப்பாக ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் அவர்கள் போராடினர். இதில் கடந்த செப். 20-ல், தெஹ்ரானில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 17 வயது சிறுமியான நிகா ஷகராமி என்பவர், போராட்டத்துக்குப் பின் காணாமல் போனார். சில நாள்களுக்குப் பின், அவர் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் மரணத்துக்குக் காரணம், அங்கிருந்த மதவாத கும்பல் என்று ஈரானிய அரசு தரப்பிலும், பாதுகாப்புப்படையினரே காரணம் என்று போராட்டக்காரர்கள் தரப்பிலும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நிகாவின் தாய் ஷகர்கமி, சர்வதேச ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், “நானும் என் மகளைப்போல, கட்டாய ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்புதான் தெரிவிக்கின்றேன். இருந்தாலும், எங்கள் தலைமுறையினர் போராடும் அளவுக்கு தைரியமில்லாதவர்களாக இருந்திருக்கிறோம். பல தசாப்தங்களாக எங்கள் தலைமுறையினர் அடக்குமுறையையும், அவமானத்தையும் சந்தித்துவிட்டோம். என் மகள் அப்படியிருக்க வேண்டுமென்றில்லை. அவளுக்கு போராடுவதற்கான எல்லா உரிமையும் உள்ளது. அதனால்தான் அவள் போராடினாள்” என்றுள்ளார்.
இதனிடையே, இறந்த நிகாவின் உடலை கைப்பற்றி, 40 கிமீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் ரகசியமாக புதைத்ததாக சில ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் அவர் இறுதியாக தனது தோழி ஒருவரிடம், தான் காவல்துறையினரால் துரத்தப்படுவதாகக் கூறியுள்ளார். அந்த ஃபோன் கால் ஆதாரத்தைக் கொண்டே, பாதுகாப்புப்படையினரால்தான் நிகா உயிருக்கு ஆபத்து நிகழ்ந்ததாக போராட்டக்காரர்கள் கூறினர்.

இந்நிலையில், `நிகா நடந்து செல்கிறார் பாருங்கள்’ எனக்கூறி சிசிடிவி காட்சியொன்றை அதிகாரிகள் வெளியிட்டனர். அதில் இருப்பது நிகாதான் என்று, நிகாவின் சித்தி மற்றும் மாமா வாக்குமூலம் அளித்தனர். ஆனால், சிசிடிவி காட்சியில் இருப்பது தன் மகள் இல்லை என்று அவரின் தாய் மறுத்துள்ளார். தன் மகள், இறப்பதற்கு முன்பு போராட்டக்களத்தில்தான் இருந்தார் எனவும், ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் தற்போது தெரிவித்துள்ளார். மேலும், நிகாவின் சித்தி மற்றும் மாமா ஆகியோர், அந்த வாக்குமூலத்தை அளிக்க நிர்பந்தப்படுத்தப்பட்டதாகவும், குறிப்பாக நிகாவின் மாமா மோஷனின் 4 வயதுக் குழந்தைக்கு பாதுகாப்புப் படையினரால் கொலை மிரட்டல் வந்ததாலேயே அவர்கள் அப்படி சொன்னதாகவும் நிகாவின் தாய் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து நிகாவின் தாய் அளித்த பேட்டியில், “எங்கள் மகளை, அவள் இறந்து சுமார் 10 நாள்கள் கழித்து பிணவறையில் சில நொடிகள் மட்டுமே நாங்கள் பார்த்தோம். அதுவும், அந்த உடல் என் மகளுடையதுதான் என்பதை உறுதி செய்யவே எங்களை அழைத்துச் சென்றனர். போராட்டக்களத்தில் இருந்த நிகா, அங்கிருந்த பாதுகாப்புப்படையினரால் கைது செய்யப்பட்டு 5 நாள்கள் கஸ்டடியிலும், பின் சிறைவாசிகளின் வசமும் இருந்திருக்கிறார் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்தது” என்று கூறியுள்ளார்.
இவையாவும் ஈரானில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. சிறுமியின் இறுதிச் சடங்கில் கூட்டம் கூடாமல் இருக்க அவரது உடலை திருடி ரகசியமாக புதைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்திருப்பதால், அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது.
– இன்பென்ட் ஷீலா