ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான ஆவணங்களை நீலகிரி தனிப்படை போலீசார், சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உட்பட 326 பேரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, பல்வேறு சாட்சிகளிடம் கோவையில் உள்ள பிஆர்எஸ் அலுவலகத்தில் ஐஜி சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனால், தனிப்படை போலீசார் இதுவரை சாட்சிகள் மற்றும் குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணை தொடர்பான ஆவணங்களை நேற்று முன்தினம் ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிபதி முருகனிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்த ஏதுவாக இவ்வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் சிபிசிஐடி போலீசார், நீலகிரி மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து பெற்று சென்றனர். இனி இவ்வழக்கு தொடர்பாக அனைத்து சாட்சிகளிடமும், குற்றவாளிகளிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணையை துவங்க உள்ளனர். இதனால், மீண்டும் கொடநாடு கொலை வழக்கு சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
