சீனி துவை! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

சீனி துவை..

அஞ்சுக்கறி சோற்றுக்கு அப்பால் ஆறாம் சுவை’யாம் சீனி’துவையைப் பற்றி அறிய வேண்டுமென்றால்…

காவிரி டெல்டாவின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாக்கம் கோட்டூர், ஏனங்குடி மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடிக்கால் பாளையம், அடியக்க மங்களம் அதனைச் சுற்றி அமைந்திருக்கும் சிறு கிராமங்களிலுள்ள விருந்துகளில் நீங்கள் அவசியம் பங்கெடுத்து இருக்க வேண்டும்.

சீனித்’துவையை பற்றிய செயல்முறை விளக்கம் எல்லாம் நீங்கள் அதற்காகவே படைக்கப்பட்டிருக்கும் தலைசிறந்த சமையல் கலைஞர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்,

இனி இக்கட்டுரை கூறும் சீனி’துவை பற்றி…

நீங்கள் இதனைப் பற்றி நான் சொல்லி செய்தீர்களானால் அது சீனித்’துவையாக இருக்காது சீனி’ரசமாகத் தான் இருக்கும்.

ஆகவே! இப்போது அதன் சுவையை பற்றியே நாம் பேசுவோம்…

Representational Image

தலைசிறந்த சமையல் கலைஞர்களின் தரமிகு கரங்களால் படைக்கப்படும் சுவைமிகு படையல் தான் இந்த சீனி’துவை என்பது,

பசு நெய்யோடு, பாசுமதி அரிசி உறவு கொள்ள மெத்தையாய் மாறிய சட்டியின் மத்தளத்தில்,..

சமதளப் படுகையில் இருந்து சவுக்கு விறகுகள் யாவும் தன்னை சவமாக்கி அவை இ(பி)ணைய வெளிச்ச வேள்வியை உற்பத்தி செய்த பின் நெய்யோடு கலந்து கர்ப்பம் தரித்த அரிசியில் சில இரு விரல்களுக்கிடையில் சிக்கி சீரழியும்,

பல மனித வாய்க்குள் சிக்கி மரணத்தை தழுவும், இதுதான் அதன் விதியாகும்.

இப்போது, சூடான செம்பு சட்டிக்குள் இருந்து சுரண்டப்பட்ட சோறானது மேனி மினுமினுக்க நம் கண்களில் ஒளிர்விடும்

அவ்வேளையில்..

சிறிய சில்வர் தட்டால் வெட்டப்படும் சோற்றுப் படுகை…

மனிதக் கரங்கள் சடுகுடு விளையாடும் சஹானுக்குள் (சஹான்-நால்வர் அமர்ந்து உண்ணும் பெரிய தட்டு) கொட்டப்படும்..

அது கொட்டப்பட்ட வேளையில் கட்டப்பட்ட கைகளையும், (கொஞ்சம் கைலி(லுங்கி)யையும் அவிழ்த்துவிட்டு…

கொலபசி அங்கு கொலவெறியாய் மாறி படர்ந்த பாசுமதிச் சோற்றின் மீது பாய்ந்து பிசையும்…

பெரும் வன்முறை நிகழ்ந்த சஹான் மைதானத்தில் பிசைந்து எடுக்கப்பட்ட பாசுமதி சோறு பிசினைப் போல் ஒட்டிக்கொள்ள அதன்மீது ஐவிரல் கொண்டழுத்துகையில் சஹானோடு, சகலமாய் சவமாகிப் போன சோற்றுக் கூட்டணியின் மேனி மீது நம் விரல் ரேகைகள் விளக்கமாய் தெரிந்தால் பக்குவம் வந்ததாக அடுத்த சுற்று ஆரம்பமாகும்.

நம் உமிழ்நீரை வெளிக்கொணரும் உள்ள நீரைக் கொண்ட எலுமிச்சை பழமானது சொச்ச சோற்று படுகையில் மிச்சமின்றி பிழியப்பட்டு எச்சிலை இதழ்களுக்குள் சுரக்கும்,

கசக்கி பிழிய பட்டபின் கிழிந்துபோன எலுமிச்சையானது சஹானை சுமந்து நிற்கும் காகித மெத்தை மீது கவனிப்பாரற்று கிடக்கும்.

பழச்’சாறோடு பிணைந்த பதச்சோறு புதிய சுவையோடு தன்னை புனரமைத்து நிற்கும்,

அருகே! நாணம் கொண்டு கூனி நிற்கும் வாழைப்’பழமதின் ஆடை விலக்கி’யதும் வெட்கி விலகி சோற்று மெத்தைக்குள் விழும் அதன் மேனியை பிழிந்திட, கற்பூரவள்ளி பழமது கற்பை காத்திட சோற்றோடு சேர்ந்து தன்னை மறைக்கும்,

வாழையோடு சேர்ந்த சோறானது சுவை முழுதும் வேறானதாய் நாவில் இனிக்கும்,

காஷ்மீர் ரோஜாவைப் போல் நறுக்கப்பட்ட தக்காளி துண்டங்களில் தேன் தடவியதைப்போல் தெளித்து வைக்கப்பட்ட சீனி’பாகுவோடு சிறிது முந்திரியும் கலந்த பச்சடி’யை நம் நாவு இச்’சடிக்கத் துடிக்கும்..

இப்பச்சடியோடு பிசையப்படும் பாசுமதி சோறானது, செந்நிற ரோஜாக்களின் சதைப் பிண்டமாய் காட்சி தந்து அதைப் பிசைந்த கரங்கள் வந்து தன்னை ஒத்தடம் கொடுக்காதா? என வாய் விரும்பி நிற்கும்போது,

அதுவரையில் பொறுமை காத்த கரங்கள் கோப்பை நிறைய குடி இருக்கும் சீனித்’ துவைக்குள் தனித் தனி தீவுகளாய் வரைபடம் வரைந்து நிற்கும் தயிரின் மணமோடு..

நம் பசியாற்ற கரங்கள் பரிமாறும் தருணமோடு.

சீனித்’துவை படையல் படைக்கப்படுகிறது..

இப்படையலில் தொழில்முறை வித்தகர்களாக, ஏனங்குடி, பாக்கம் கோட்டூர், கொடிக்கால் பாளையம், ஆரூர், அடியக்க மங்களம், புலிவலம் போன்ற ஊர்களில் இருந்து ஏராளமானோர் களமாட காத்து நிற்பர்.

இவர்களின் கரடு முரடான கரங்களால் பிசையப்படும் சோறானது சீனித்துவை சோறா? அல்லது சோற்றுக்’கஞ்சியா! என வித்தியாசமின்றி காணப்படும் அது அவர்களுக்கு கை’வந்த கலை நமக்கோ கை’நொந்த கலை.

Representational Image

இந்த ஊர்களில் இருந்து தான் சீனித்’ துவைக்காக என்றே படைக்கப்பட்ட சிறந்த படைப்பாளிகள் தலைமுறை தலைமுறையாக உருவாகின்றனர்.

சொந்தமோடு பந்தம் கொள்கிறார்களோ! இல்லையோ! ஆனால் சீனித்’ துவையோடு இவர்கள் கொண்ட பந்தமானது இன்னும் காலத்தால் அழியாமல் பல தலைமுறைகளைக் கடந்தும் வியாபார சந்தை களத்தைப் போன்று வியாபித்து நிற்கிறது.

இவர்கள் நடத்தும் விருந்துகளில் மணமக்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ! இல்லையோ! சீனித்’ துவைக்கு சிறப்பு விருந்தினர் நிச்சயம் இருப்பார்கள்.

சீர்வரிசை இருக்கிறதோ! இல்லையோ! சீனித்’துவையின் மணம் சீராக இருக்கும்…

எண்ணமும் எழுத்தும்

பாகை இறையடியான்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.