பழனியில் பள்ளத்தில் இருந்த வீட்டை லிப்டிங் முறையில் உயர்த்திய விவசாயி… வீட்டை இடித்து விட்டு கட்டுவதை விட இது செலவு குறைவு எனக் கூறியுள்ளார்.
பழனி அடுத்த சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சச்சிதானந்தம். இவர் தனது கிராமத்தில் 17 வருடங்களுக்கு முன்பாக 800 சதுர அடியில் வீட்டைக் கட்டி உள்ளார். தற்போது வீட்டின் முன்பு இருந்த சாலை உயர்ந்ததால் பள்ளம் ஏற்பட்டு மழைக்காலங்களில் வீட்டிற்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் மழை பெய்யும்போது வீட்டிற்குள் தண்ணீர் செல்வதால் சச்சிதானந்தம் குடும்பத்தினர் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் வீட்டை இடித்து விட்டு புதிதாக கட்டுவதற்கு சச்சிதானந்தம் முற்பட்டபோது கோவையைச் சார்ந்த பொறியாளர் அறிவுரையின் பேரில் பழைய வீட்டை இடிக்காமல் லிப்டிங் முறையில் உயர்த்த முடிவு செய்துள்ளனர். வீட்டினுடைய அடிப்பாகம் முழுவதுமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்கிகள் உதவியுடன் மேலே உயர்த்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பழைய வீட்டை லிப்டிங் முறையில் உயர்த்துவதால் புதிய வீடு கட்டுவதற்கு ஏற்படக்கூடிய செலவு, நேரம் குறையும் என்பதால் இந்த முயற்சியில் சச்சிதானந்தம் ஈடுபட்டுள்ளார்.

“லிப்டிங் முறையில் கட்டடத்தை உயர்த்தக்கூடிய தொழில்நுட்பத்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். தேவை இல்லாமல் கட்டடத்தை இடிக்க வேண்டியதில்லை, மேலும் பில்லர்கள் உள்ள கட்டடத்தை மட்டும் தான் உயர்த்த முடியும் என்பது இல்லை. பில்லர் இல்லாத கட்டடத்தை கூட இது போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உயர்த்திக் கொள்ள முடியும்” எனவும் பொறியாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சத்திரப்பட்டி கிராமத்தில் விவசாயி சச்சிதானந்தம் தனது வீட்டு லிப்டிங் முறையில் உயர்த்துவதை கிராம மக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர். பெருநகரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரக்கூடிய இது போன்ற தொழில்நுட்பம் தற்போது கிராமப்புரங்களுக்கும் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM