கொடைக்கானல்: பழநி- கொடைக்கானல் இடையே ரோப்கார் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ரூ.450 கோடியில் அமையவுள்ள இத்திட்டம் குறித்து ஆஸ்திரிய நாட்டு வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். கொடைக்கானல் மற்றும் பழநி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக ரோப்கார் திட்டம் இருந்து வருகிறது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் கொடைக்கானல்- பழநி ரோப்கார் திட்டம் செயல்படுத்துவதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த ரோப்கார் வல்லுனர்கள் மார்க்கஸ் டூர்ச்சர், ஜார்ஜ் ஈகர் ஆகியோர் நேற்று கொடைக்கானல் வில்பட்டி, புலியூர், குறிஞ்சி ஆண்டவர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். இந்த திட்டம் அமைய சுமார் 2 ஆண்டுகள் ஆகும் எனவும், ரூ.450 கோடி செலவாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.