மதுவிலக்கு ஏன் சாத்தியமாகவில்லை? உயர் நீதிமன்றம் சொன்னது என்ன?

மதுவிலக்கு சட்டம் 1937ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டாலும், வருவாய் ஆதாரமாக டாஸ்மாக் மதுபான விற்பனை உள்ளதால் தமிழகத்தில் மதுவிலக்கு இதுவரை சாத்தியமாகவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பாக, கடந்த ஆகஸ்ட்டில் வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

டெண்டர் கோரி விண்ணப்பிக்கும் போது நில உரிமையாளர்களிடம் தடையில்லா சான்றை நிர்பந்திக்கவில்லை எனவும், டெண்டர் இறுதி செய்த பின் நில உரிமையாளர்களிடம் குத்தகை ஒப்பந்தம் தாக்கல் செய்யவேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அனைவருக்கும் டெண்டர் படிவங்கள் வழங்கப்படவில்லை எனவும் மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், கடந்த இரண்டு வாரத்திற்கு முன் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று முழுமையாக உத்தரவு நகல் வெளியாகி உள்ளது. அதில் 1937ஆம் ஆண்டில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், ஆனால் அரசின் வருவாய் ஆதாரமாக டாஸ்மாக் மதுபான விற்பனை உள்ளதால், மதுவிலக்கு இதுவரை சாத்தியமாகவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு டாஸ்மாக் மூலம் மதுவிற்பனையை துவங்கிய பின், இதுவரை, 5358 மதுபான கடைகள் இயங்கி வருவதாகவும், இந்த கடைகள் மூலம் விற்பனை ஒழுங்குபடுத்த மட்டுமே பல்வேறு விதிகளையும், உத்தரவுகளையும் அரசு பிறப்பித்து வருவதாகவும் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2014 முதல் ஒவ்வொரு முறை டாஸ்மாக் டெண்டர் அறிவிக்கப்படும்போதும், டெண்டர் நடைமுறைகள் தொடர்பாக வழக்குகள் தொடரப்படுவதால், அந்த டெண்டர் நடைமுறையில் ஏதோ சிக்கல் இருப்பது தெரிவதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை பொறுத்தவரை, டெண்டர் திறந்த பிறகு 7 நாட்களில் வாடகை ஒப்பந்தத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பது தவறான நடைமுறை என்பதால், டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி, பார் அமைக்க இட உரிமையாளரின் ஒப்புதல் அவசியமாகிறது என்பதால், டெண்டர் அறிவிப்பிற்கு முன்பே தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

அந்த டெண்டர் திறக்கும் தேதியில் அந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கும் வகையில், அனைத்து டாஸ்மாக் மையங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு, அவை முழுமையான செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டதால் புதிய டெண்டரை வெளியிடலாம் என்றும் நில உரிமையாளர்களிடம் டாஸ்மாக் நிர்வாகம் தடையில்லா சான்று பெற வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.