தூத்துக்குடி மாவட்டத்தில் மது போதையில் நடந்த தகராறில் லாரி ஓட்டுநர் 3 பேரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் பூப்பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் அழகுமுத்து (40). இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நண்பர்களான அதிக பகுதியை மணிகண்டன் (38) மற்றும் முருகன் (35) ஆகியோருடன் சேர்ந்து அழகுமுத்து தாளமுத்து நகர் பகுதியில் உள்ள மதுபான கடை அருகே உட்கார்ந்து மது அருந்தினார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் தாழையப்பன் என்பவரும் அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்பொழுது, அனைவரும் மது போதையில் இருந்த நிலையில், அழகுமுத்து தரவேண்டிய பணத்தை தாழையப்பன் கேட்டுள்ளார்.
இதனால் இவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த தாழையப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அழகுமுத்துவை குத்தியுள்ளார். இதை தடுத்த சென்ற மணிகண்டன் மற்றும் முருகன் ஆகியோரையும் தாழையப்பன் கத்தியால் குத்தியுள்ளார்.
இதையடுத்து காயமடைந்த மூன்று பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தாளமுத்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.