திருமலை: முதுகு வலி, ஆஸ்துமாவை குணப்படுத்துவதாக கூறி ஆந்திராவில் கழுதை இறைச்சி விற்ற 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டத்தில் அரசின் தடையை மீறி கழுதை இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக தகவலின்பேரில் போலீசார் நேற்று இறைச்சி கூடங்களில் சோதனை நடத்தினர். இதில் 4 இடங்களில் கழுதை இறைச்சி விற்ற 7 பேரை போலீசார் கைது செய்து, 400 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர். அதேபோல் இறைச்சிக்காக இருந்த கழுதைகளையும் மீட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கழுதை இறைச்சியை ஒரு கிலோ ரூ.600க்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகையில், ‘ஆந்திராவில் கழுதைகளை கொல்லும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
ஆனால், இறைச்சி கூடங்கள் மீது சோதனை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல் முறை. அறிவியல் ஆதாரம் இல்லை என்றாலும், ஆந்திராவின் சில பகுதிகளில் கழுதை இறைச்சி முதுகு வலி, ஆஸ்துமாவை குணப்படுத்தும் என்றும், பாலுணர்வை தூண்டும் மருந்தாகவும் பயன்படும் என்றும் கூறி வருகின்றனர். கழுதையின் ரத்தத்தை குடிப்பதன் மூலம் வலி நிவாரணியாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஆந்திராவில் பிரகாசம், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி மற்றும் குண்டூர் மாவட்டங்களில் கழுதை இறைச்சி அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. கழுதைகளை வெட்டுவதை ஒன்றிய அரசு தடை செய்துள்ள நிலையில், இதை மீறினால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது 2ம் விதிக்கப்படும்,’ என்றனர்.