ராஜபாளையம் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த கணவன், மனைவியை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்தனர். இந்த மோசடி குறித்து குற்றப்பிரிவு போலீஸார் தெரிவிக்கையில், “விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியம். இவருடைய மனைவி ஆரோக்கிய அற்புதமேரி. இவர் அப்பகுதியில் தையல் கடை நடத்தி வந்தார். நாளடைவில் தையல்கடையை மூடிவிட்டு, அழகு நிலையம் நடத்தி வந்துள்ளார். அப்போது ஆரோக்கிய அற்புத மேரிக்கும், மதுரையை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின் அடிப்படையில், `அரசின் சுகாதாரத் துறையில் யாருக்கேனும் வேலை வேண்டுமென்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள், நான் வேலை வாங்கித் தருகிறேன்’ என பிரகாஷ் நம்பிக்கை அளித்துள்ளார்.
அதன்பேரில் ஆரோக்கிய அற்புதமேரியும், அழகு நிலையத்துக்கு வரும் தனக்குத் தெரிந்தவர்களிடம் `மருத்துவமனையில் நர்ஸ் வேலை வேண்டுமென்றால் நான் வாங்கித்தருகிறேன்’ எனக் கூறி ஆள் சேர்த்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட ஒரு பெண்ணுக்கு தகுதியின் அடிப்படையில் அரசுத்துறையில் நர்ஸ் வேலை கிடைத்துவிட, தன்னுடைய ஏற்பாட்டால்தான் அந்தப் பெண்ணுக்கு வேலை கிடைத்ததென ஆரோக்கிய அற்புதமேரி மற்றவர்களிடம் கூறி பெருமைப்பாடியுள்ளார்.

இதை நம்பியவர்களில், ராஜபாளையத்தைச் சேர்ந்த டி.பார்ம் பட்டதாரியான மணிகண்டன் என்பவர், தனக்கு சுகாதாரத் துறையில் பார்மாசிஸ்ட் வேலை வாங்கித் தரக்கேட்டுள்ளார். இதற்காக, எட்டு லட்ச ரூபாயை பெற்றுக்கொண்ட ஆரோக்கிய அற்புதமேரி, தொடர்ந்து அவரை ஏமாற்றி வந்துள்ளார். இதற்கிடையில் மணிகண்டனை போல், பலரிடமும் அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஆரோக்கிய அற்புதமேரியும், அவர் கணவர் ஆரோக்கியமும் சேர்ந்து லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர். இதில், முத்துக்கிருஷ்ணன் என்பவரிடம் அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ.4 லட்சம், சேத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சத்துணவு உதவியாளர் பணிக்கு ரூ.5 லட்சம், சாத்தூரைச் சேர்ந்த வீரமணிகண்டனிடம், டாஸ்மாக் மேலாளர் பணிக்கு ரூ.4 லட்சம், கணேசன் என்பவரிடத்தில் பொதுப்பணித்துறை உதவியாளர் பணிக்கு ரூ.13 லட்சம், ராஜபாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம், எழுத்தர் பணிக்கு ரூ.12 லட்சம் என வெவ்வேறு நபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், பணத்தை இழந்த மணிகண்டன் தான் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸாரின் விசாரணைக்கு பயந்து ஆரோக்கியமும், அவர் மனைவி ஆரோக்கிய அற்புதமேரியும் ராஜபாளையத்திலிருந்து தலைமறைவாகினர். தொடர்ந்து அவர்கள் குறித்து துப்புத்துலக்கியதில் ஆரோக்கியம், அற்புதமேரி இருவரும் சொந்த ஊரான திருச்சியில் சில நாள்கள், சென்னையில் சில நாள்கள் என மாறி மாறி தங்கிவந்துள்ளனர். இதற்கிடையே அவ்வப்போது, ராஜபாளையத்தில் உள்ள வீட்டுக்கு வந்த அவர்கள், இரவில் தங்கிவிட்டு அதிகாலையில் ராஜபாளையத்திலிருந்து வெளியூருக்கு தப்பிவிடுவதும் விசாரணையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ஆரோக்கிய அற்புதமேரி மற்றும் அவர் கணவர் ஆரோக்கியத்தின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்ததில் ராஜபாளையம் சுந்தரநாச்சியார்புரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வெளியூர் தப்பிச் செல்வதற்காக காத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், ஆரோக்கியத்தையும், அவர் மனைவி ஆரோக்கிய அற்புதமேரியையும் சுற்றிவளைத்து பிடித்தனர்.

பிடிப்பட்டவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், `அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த பணத்தை தாராளமாக செலவுசெய்து, உல்லாச வாழ்க்கை வாழ்ந்தோம். கணவர் ஆரோக்கியத்திற்கு இருதய குறைபாடு நோய்க்காக குறிப்பிட்ட பணத்தை செலவு செய்ததோடு, சில பேருக்கு வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுத்துவிட்டோம்’ என ஆரோக்கிய அற்புதமேரி வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில், அவர்கள் இருவரும் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டு ஆரோக்கிய அற்புதமேரி மதுரை சிறையிலும், ஆரோக்கியம் விருதுநகர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்” என்றனர்.