தமிழகத்தை ஆளும் திமுக அரசு மத்திய அரசின் திட்டங்களை தங்களது திட்டங்களாக காட்டிக் கொள்கிறது என்று மத்திய நீர் வளம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் டுடு குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று சேலம் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மத்திய நீர் வளம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் டுடு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“மத்திய அரசு தமிழகத்திற்கு பல்வேறு நலத் திட்டங்களையும் அதற்கான ஒதுக்கீடுகளையும் செய்து வருகிறது. மக்களின் நலன் கருதி மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செய்தாலும் தமிழக அரசு அதனை மக்களுக்கு முழுமையாக கொண்டுபோய் சேர்க்கவில்லை.
அதேபோல், மத்திய அரசு திட்டங்களின் பெயர்களை மாற்றி தங்களது திட்டங்களாக மாற்றி கொண்டு மத்திய அரசின் நிதிகளை மற்ற பணிகளுக்கு செலவிடுகின்றனர்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் 53 சதவீதம் மட்டுமே வீடுகளுக்கு இலவச குடிநீர் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை 2022க்குள் முடிக்கப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தும் ஆனால், இன்னும் முடிக்கப்படாததால் அந்த திட்டம் 2024 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மலைவாழ் மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக இந்தியா முழுவதும் 700 சிறப்பு பள்ளிகள் துவக்கப்பட உள்ளதாகவும், இதில் எட்டு பள்ளிகள் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, இரண்டு பள்ளிகள் பணிகள் நிறைவு பெற்று செயல்பட தொடங்கியது. ஆனால் இரண்டு பள்ளிகளில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மீதம் உள்ள நான்கு பள்ளிகளுக்கு வேலை இன்னும் துவக்கப்படவில்லை.
இந்த பள்ளிகளில் சர்வதேச தரத்திற்கு ஏற்றார் போல் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கவும், ஆண்கள் மற்றும் பெண்கள் என்று இருபாலரும் சமமாக பயிலும் வகையிலும், அனைவருக்கும் இலவச கல்வி அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இதைத் தொடர்ந்து மத்திய அரசின் பெரும்பாலான திட்டத்திற்கு மாநில அரசு பங்களிப்பு இல்லாததால் மத்திய அரசின் சார்பில் ஒதுக்கப்பட்ட நிதி திரும்ப பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில், மாநில அரசுகள் கவனம் கொண்டு, மத்திய அரசு நிதியை பெற்று தங்களின் பங்களிப்போடு சேர்த்து இந்தத் திட்டத்தை மிகவும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
ஜல்சக்தி திட்டத்தின் கீழ் இலவச குடிநீர் வழங்குவதற்காக மக்களிடம் பல்வேறு ஆவணங்கள் கேட்பதாக புகார் எழுந்தது. ஆனால் மின்சார இணைப்புக்கான ஆவணங்கள் இருந்தாலும் கூட அவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற ஆவணங்களை கேட்டு பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு அலுவலகங்களில் தமிழக முதலமைச்சர் மற்றும் பாரத பிரதமர் படம் இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில் கலைஞர் கருணாநிதி படமும், தமிழக முதலமைச்சர் படம் மட்டுமே உள்ளது. பாரத பிரதமர் படம் வைக்காதது துரதிஷ்டவசமானது என்றும், பொதுவாக மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றும் மத்திய நீர்வளம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.