சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்க உள்ள நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தொடர்பாக பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் மீண்டும் மனு அளித்துள்ளனர்.
சட்டப் பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டதாக பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இதற்கிடையில், தன்னை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்றும், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்றும் பேரவைத் தலைவரிடம் ஓபிஎஸ் கடிதம் கொடுத்தார்.
அதேசமயம், பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டதாக பழனிசாமி தரப்பினரும், பேரவைத்தலைவரிடம் கடிதம் மூலம் தெரிவித்தனர். இந்தக் கடிதங்கள் பரிசீலனையில் இருப்பதாக, பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தலைமை அலுவலகத்தில் பழனிசாமி தலைமையில், நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரின் இருக்கைகளை மாற்றும்படி பேரவைத் தலைவரிடம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் பேரவைக் கூட்டத்தை புறக்கணிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்தச் சூழலில் பேரவைத் தலைவர் அப்பாவுக்கு ஓபிஎஸ் நேற்று கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தன் தரப்பு விளக்கம் கேட்காமல் இருக்கை மாற்றம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி குறித்து முடிவெடுக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் கடிதத்தை, அதிமுக துணை கொறடாவான சு.ரவி, சட்டப்பேரவைச் செயலரிடம் நேற்று அளித்துள்ளார். அதில், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் அவரை அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.