கடலூரில் தனியார் பள்ளி குழந்தைகள் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்பு!
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ், மதிமுக, தமிழ்நாடு முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ உட்பட 50க்கும் மேற்பட்ட இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கலந்து கொண்டனர். மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் மத நல்லிணக்க மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சார்பாக நடைபெற்றது. சுமார் 50க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்திற்கு ஆள் வராத காரணமோ என்னவோ பள்ளி குழந்தைகளை அழைத்து வந்துள்ளனர். இந்த போராட்டத்தில் குழந்தைகள் பள்ளி சீருடை உடன் கலந்து கொண்டனர். இவர்கள் தனியார் பள்ளியின் அனுமதியுடன் கலந்து கொண்டனரா? அல்லது பெற்றோரின் அறிவுறுத்தலின்படி இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனரா? அல்லது அரசியல் கட்சித் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்துவரப்பட்டனரா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுபோன்று அரசியல் கட்சி ஆர்ப்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் பள்ளி மாணவர்களை பள்ளிக்கல்வித்துறை அனுமதிக்கிறதா?. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் உரிய விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் இடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.