தகவல் கமிஷனர்களுக்கான 42 பணி இடங்கள் காலி| Dinamalar

புதுடில்லிநாடு முழுதும், தகவல் கமிஷனர்களுக்கான 42 பணி இடங்கள் காலியாக இருப்பதாகவும், இரண்டு மாநிலங்களில் தலைமை தகவல் கமிஷனர்களே இல்லை என்றும் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அரசு துறைகளில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ரகசிய நடைமுறைகளுக்கு முடிவு கட்டுவதற்காக, தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ல் அமலுக்கு வந்தது. இன்றுடன் இந்த சட்டம் அமலுக்கு வந்து 17 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் செயல்பாடு, அதில் உள்ள சவால்கள், சந்திக்கும் சிக்கல்கள் குறித்து, ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இந்தியா’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆண்டுதோறும் அறிக்கைவெளியிட்டு வருகிறது.

இந்த அமைப்பின் 6வது ஆண்டு அறிக்கை சமீபத்தில் வெளியானது.

அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:

கடந்த 2005 – 06 முதல் 2020 – 21 வரையிலான காலகட்டத்தில், 4 கோடியே 20 லட்சத்து 75 ஆயிரத்து 406 தகவல் அறியும் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்ட போதும், பெரும்பான்மையான அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் மனநிலை, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்ததை போலவே ரகசியம் காப்பதிலேயே குறியாக உள்ளன.

இப்போதும், தகவல் கோரி அரசு துறைகளுக்கு வரும் மனுக்களை பெரும் பாரமாகவே அதிகாரிகள் கருதுகின்றனர்.

நாடு முழுதும் தலைமை தகவல் கமிஷனர்கள் மற்றும் தகவல் கமிஷனர்கள் பதவிகளுக்கு 165 பேரை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதில், தகவல் கமிஷனர்களுக்கான 40 இடங்கள் காலியாக உள்ளன. குஜராத் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் தலைமை தகவல் கமிஷனர்களே இல்லை.

தகவல் கமிஷனர்கள் பதவிகளில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம், கர்நாடகா, புதுடில்லி, மஹாராஷ்டிரா உட்பட 11 மாநிலங்களில் மட்டுமே, ‘ஆன்லைன்’ வாயிலாக தகவல் அறியும் மனுக்களை தாக்கல் செய்ய வசதி உள்ளது; மற்ற மாநிலங்களில் அந்த வசதி இல்லை.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.