திருவாரூர்: திருவாரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் அருகே நேற்று நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கலந்து கொண்டன. முன்னதாக கே.எஸ்.அழகிரி மன்னார்குடியில் அளித்த பேட்டி: கவர்னர் ஆர்.என். ரவி தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும் எதிராக செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தொன்மையான தமிழர் வரலாற்றை உள்நோக்கத்தோடு திரித்து பேசுகிறார். மாணவர்கள் மத்தியில் விஷமத்தனமான கருத்துக்களை திட்டமிட்டு பரப்புகிறார்.
இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருக்கும் என மறைந்த முன்னாள் பிரதமர் நேரு, மக்களுக்கு வாக்கு கொடுத்தார். காங்கிரஸ் எந்த ஒரு மொழிக்கும் எதிரானது அல்ல. எந்த மொழியையும் யாரும் விரும்பி படிக்கலாம். மாற்று மொழியை திணிக்க கூடாது. இந்தி திணிப்பில் பாஜ முனைப்பு காட்டுவது நல்லதல்ல. ஒன்றிய அரசின் உதய் மின் திட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த முடிவுக்கு நேர்மாறாக அவர் மறைவுக்கு பின்னர் அதிமுக கையெழுத்து போட்டதால் தான் தற்போது தமிழகத்தில் மின் கட்டணம் உயர காரணமாக அமைந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.