திண்டுக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பீட்டர் அல்போன்ஸ், “பிரதமர் மோடி நிறைய மேடைகளில் எல்லோருக்குமான வளர்ச்சி… எல்லோருக்குமான நீதி என்று பேசி வருகிறார். ஆனால் பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.பி குறிப்பிட்ட சமூகத்தை புறக்கணிக்க வேண்டும் என பொது இடங்களில் பேசுகிறார். தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் என்ற பெயரில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது அதில், `வரும் தீபாவளிக்கு இஸ்லாமியர்களின் கடைகளில் பொருள்களை வாங்கக்கூடாது’ என்கின்றனர். எனவே மக்கள் மதம் சார்ந்த சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை புறக்கணிக்க வேண்டும்.
தமிழக ஆளுநர் பேசி வருவது முறையான செயல் அல்ல. தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றிய அறிஞர்களைப் பற்றி பேசுவது அவர்கள் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் ஆற்றிய தொண்டுக்கு துரோகம் செய்யும் செயலாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட தமிழ் அறிஞர்கள் பற்றி அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்காக மட்டுமே அவர்களது தமிழக பணியையும் தமிழ் இலக்கியப் பணியும் தமிழுக்காக ஆற்றிய பணியையும் கொச்சைப்படுத்தியிருப்பது மன்னிக்க முடியாத குற்றம், இதை ஆளுநர் தொடர்ந்து செய்யக்கூடாது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி பற்றி பேசியதற்கு ஸ்டாலின் மீண்டும் ஒரு இந்தி போராட்டத்தை தூண்ட வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்கவேண்டும் என உள்துறை அமைச்சர் சொல்வது போல நடைமுறைக்கு வரும் என்றால் வரும்காலங்களில் தமிழக இளைஞர்களுக்கு யாருக்கும் அரசு பணி கிடைக்காது. தமிழக இளைஞர்களின் வாழ்வாதாரம் பிரச்னைக்கு உள்ளாகும். உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்தை ஒரு குப்பைத் தொட்டி போல நினைக்கக்கூடாது” என்றார்.