`திருமணமானதை அறிந்தும் அந்த ஆணுடன் உறவு; பாலியல் வன்புணர்வு ஆகாது’ – கேரள உயர் நீதிமன்றம்

கேரளாவில், திருமணம் செய்வதாகக்கூறி, பெண்ணுடன் உறவு கொண்ட நபர் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. திருமணமானதை அறிந்தும் அந்த ஆணுடன் உறவு கொண்டால் பாலியல் வன்புணர்வு ஆகாது எனவும் தெரிவித்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த 33 வயது நபர், திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளித்ததன் பேரில், பெண்ணுடன் உறவு கொண்டார். கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து 2019 மார்ச் வரை, இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமாக இருவரும் இணைந்து வாழ்ந்துள்ளார். அத்துடன், அந்தப் பெண்ணிடம் இருந்து ரூ. 15 லட்சம் தொகையையும், 5 சவரன் நகையையும் வாங்கியுள்ளார். ஆனால், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தவர், 2013-ம் ஆண்டு, வேறொரு பெண்ணை மணம் முடித்துள்ளார்.

இதனையறிந்த பாதிக்கப்பட்ட பெண், மனுதாரரான அந்த ஆணிடம் முறையிட்டபோது, விவகாரத்து பெற்று வந்து மீண்டும் தான் அவரையே திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, மீண்டும் அந்தப் பெண்ணுடன் உறவைத் தொடர்ந்துள்ளார்.

ரிலேஷன்ஷிப்

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட அந்த பெண் கடந்த 2019-ம் ஆண்டில், மனுதாரரை திருமணம் செய்து கொள்ளும் ஏற்பாடுகளைத் தொடங்கியபோதுதான், பல பெண்களுடன் மனுதாரர் தொடர்பில் இருந்தது வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, திருமணத்தை நிறுத்த முற்பட்டபோது மனுதாரர் அப்பெண்ணை மிரட்டியும், தற்கொலை செய்து கொள்வதாக நாடகமாடியதாகவும் கூறப்படுகிறது. தான் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்பெண், மனுதாரர் மீது புகார் அளித்தார். அதன் பேரில், அந்த நபர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், மனுதாரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரருக்கு எதிராக பொய்க்குற்றச்சாட்டுகளுடன் பதியப்பட்ட வழக்கு இது என வாதாடினார். பாதிக்கப்பட்ட பெண் சார்பில் வாதிட்ட மூத்த அரசு வழக்கறிஞர், மனுதாரரும் பாதிக்கப்பட்ட பெண்ணும், மனுதாரர் திருமணம் ஆவதற்கு முன்பும், மனுதாரர் திருமணம் ஆனதை தெரிந்து கொண்ட பிறகும் சேர்ந்தே வாழ்ந்து வந்துள்ளனர் என்று தெரிவித்தார். மனுதாரர் பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முயன்றபோதுதான் அவருக்கு பல பெண்களுடன் உறவு இருந்தது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தெரிய வந்தது; அதனையறிந்து திருமணத்தை நிறுத்த அப்பெண் முயற்சித்தபோது மிரட்டப்பட்டார். இதனையடுத்தே, மனுதாரர் மீது வன்புணர்வு புகார் அளித்துள்ளதாக வாதிடப்பட்டது.

Court (Representational Image)

இவ்வழக்கினை விசாரித்த, கேரள உயர் நீதிமன்ற தனி நீதிபதி, `மனுதாரரும், பாதிக்கப்பட்ட பெண்ணும் பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவில் இருந்ததனால், இவ்வழக்கு பாலியல் வன்புணர்வின் கீழ் வராது. தவறான சித்திரிப்புகளால் நிகழ்ந்த உறவில்லை இது; காதலாலும், உணர்ச்சியாலும் நிகழ்ந்திருக்கிறது’ என்று கூறியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்புணர்வு நடந்த பல இடங்களில், ஓர் இடத்தின் நாளையும், அறையையும் கூட நினைவுபடுத்திச் சொல்ல முடியாததால், மனுதாரர் மீதான குற்றச்சாட்டு தெளிவற்றதாக இருப்பதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கையூட்டி, பெண்ணிடம் உறவு கொண்டதோடு ரூ. 15 லட்சம் பணமும், 5 சவரன் நகையும் பெற்றதாகக் கூறப்படும் இவ்வழக்கில், ஏமாற்றுதலோ, நம்பிக்கை துரோகமோ எதுவுமில்லை என வழக்கினை நீதிபதி ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.