ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரை தலைமையிடமாகக் கொண்டு ‘ஜமாத்-இ-இஸ்லாமி, ஜம்மு காஷ்மீர்’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.
தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, இது ஒரு சட்டவிரோத அமைப்பு என மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. ஆனாலும் பல்வேறு வகையிலும் இந்த அமைப்பு நிதி திரட்டி வந்தது. இந்த நிதி, காஷ்மீரிலும் நாட்டின் பிற இடங்களிலும் தீவிரவாத செயல்களுக்காக ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகளுக்கு மாற்றி விடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கடந்த 2021 பிப்ரவரி 5-ம் தேதி வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் 4 பேருக்கு எதிராக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 6 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. அப்போது பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் ரஜவுரி, பூஞ்ச், புல்வாமா, ஷோபியான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று சோதனை நடைபெற்றது. சிஆர்பிஎப் மற்றும் உள்ளூர் போலீஸார் உதவியுடன் என்ஐஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
ஜமாத்-இ-இஸ்லாமி மீதான வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.