விதைச் சட்டம் 1966, விதை கட்டுப்பாட்டு ஆணை 1983- இன் படி விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள் மற்றும் நாற்றுகளின் தரத்தினை உறுதி செய்யும் பணியினை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் விதை ஆய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் சி.சண்முகம் பேசியபோது,
“சேலம் மாவட்டத்தில் 714 விதை விற்பனை நிலையங்களுக்கும், 94 நாற்றுப் பண்ணைகளுக்கும், விற்பனை உரிமம் வழங்கப்பட்டு விதை ஆய்வாளர்களால் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டும், விதை மாதிரிகள் எடுத்து அதை பரிசோதனை மேற்கொண்டும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதை மற்றும் நாற்றுகளின் தரம் உறுதி செய்யப்படுகிறது.

தற்பொழுது சேலத்தில் நன்றாக மழை பெய்து வருகிறது. வட கிழக்கு பருவமழை துவங்க உள்ளது. ஆகையால் நடப்பாண்டில் நெல் சாகுபடி பரப்பு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சில விவசாயிகள் நெல் நாற்றாங்கால் தயார் செய்து தேவைப்படும் விவசாயிகளுக்கு விற்பனை செய்கின்றனர் அவ்வாறு நாற்றங்கால் விட்டு நெல் நாற்றுகள் விற்பனை செய்வோர் உரிமம் பெறுவது கட்டாயம் ஆகும்.
உரிமம் பெற உறுதி செய்யப்பட்ட அ- படிவம், உரிமம் கட்டணம், ரூபாய் ஆயிரம் செலுத்தியமைக்கான இ-சலான், நில உரிமைக்கான சிட்டா, குத்தகை நிலமாயின் குத்தகை ஒப்பந்த பத்திரம், ஆதார் நகல் நிலம் அமைவிடத்திற்கான இடத்தின் வரைபடம், சுயவிவரம் 3 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பித்தினை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
விண்ணப்பங்கள் பெற்றவுடன் சம்பந்தப்பட்ட விதை ஆய்வாளர்களால் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஆய்வு அறிக்கை அடிப்படையில் விதை விற்பனை உரிமம் பதிவு அஞ்சல் மூலம் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு உடன் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் இது சம்பந்தமான விவரங்களுக்கு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசலாம். மேலும் நெல் நாற்று பண்ணையாளர்கள் நாற்றங்கால் பதிவேடு பராமரித்து நாற்றுகள் விற்பனை செய்யும் பொழுது வாங்குபவர் பெயர், முகவரி, இரகம், நாட்டின் வயது ஆகிய விவரங்களுடன் விற்பனையாளர் மற்றும் வாங்குபவரின் கையொப்பத்துடன் கூடிய ரசீது வழங்க வேண்டும். இது ஒரு எளிய முறையாகும் இதனால் உற்பத்தியாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
விவசாயிகள் உரிமை பெற்ற நாற்றுப் பண்ணையாளர்களிடம் நெல் நாற்றுகள் வாங்குமாறும் உரிய ரசீது கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். உரிமம் பெறாமல் நெல் நாற்றுகள் விற்பனை செய்வோர் மீது விதைச்சட்டம் 1966, விதை கட்டுப்பாட்டு ஆணை 1983 இன் படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மற்றும் ஏழு ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்க சட்டத்தில் விதி உள்ளது” என்றார்.