புதுடில்லி,கோவா கடற்கரை பகுதியில், இந்திய கடற்படையின் ‘மிக் – ௨௯கே’ போர் விமானம், நேற்று காலை விபத்துக்குள்ளானது; பைலட் பாதுகாப்பாக உயிர் தப்பினார்.
இது குறித்து, கடற்படை தலைமையகம் வெளியிட்ட அறிக்கை:
கோவா கடற்கரை பகுதியில் நேற்று வழக்கமான பயிற்சியை முடித்து விட்டு, மிக் – ௨௯கே போர் விமானம் இருப்பிடம் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானது. இருப்பினும், பைலட் சாமர்த்தியமாக ‘பாராசூட்’ வாயிலாக குதித்து தப்பினார்.
உடனடியாக, வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு, பைலட்டை மீட்டனர். அவர் தற்போது நலமாக உள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரஷ்ய தயாரிப்பான மிக் ரக போர் விமானங்கள் எந்த சூழ்நிலையிலும், தட்பவெட்பத்திலும் பறக்கக் கூடியவை. ஆனால், சமீபகாலமாக இவை அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதற்கு முன், ௨௦௧௯ நவம்பரிலும், ௨௦௨௦ பிப்ரவரி மற்றும் நவம்பரிலும் தொழில்நுட்பக் கோளாறால் இந்த விமானங்கள் விபத்தில் சிக்கி உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement